பக்கம்:கனிச்சாறு 7.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  109


82

மறைமலையடிகள்!


மறைமலை யடிகளே
நிறைதமிழ் வளர்த்தவர்!
மனங்கொள நினைத்திடுக! - அவரது
மாண்பினைப் புகழ்ந்திடுக!
குறைவறு நூல்பல
நிறைவுறத் தந்தவர்!
குனிதலை நிமிர்த்தியவர்! - செந்தமிழ்க்
குடியினை உயர்த்தியவர்!

துறைமிகு ஆங்கிலம்,
மறைவட மொழியொடு
தூய் தமிழ்ப் பேரறிஞர்! - தனித்தமிழ்
தோற்றிய ஓரறிஞர்!
கறைசெயும் பிறமொழி
முறையறப் புகுத்திய
கயமையை விலக்கியவர் - தமிழினைக்
கசடறத் துலக்கியவர்!

கலக்கமில் அறிவினால்
இலக்கண இலக்கியக்
கடல்கடந் தேறியவர்! - இந்தியைக்
கடிந்துரை வீறியவர்!
நலக்குறை வுறுந்தமிழ்க்
குலந்தழைத் தெழுந்திட
நாள்தொறும் எண்ணியவர்! - உரைதர
நாடெல்லாம் நண்ணியவர்!

அறிவியல் எழுதினார்;
நெறிமுறை கூறினார்;
ஆய்வுசெய் திறமுரைத்தார் ஆரியர்
அடங்கிட மறமுரைத்தார்!
செறிவுறுங் கருத்தினால்
முறிவுற மடமையைச்
சினத்தொடு தாக்கியவர் - குலவெறிச்
சிறுமையைப் போக்கியவர்.

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/154&oldid=1446216" இலிருந்து மீள்விக்கப்பட்டது