பக்கம்:கனிச்சாறு 7.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  111

கோணியில் தைத்த குப்பா யம்போல்
சாணி நிறத்தினில் தொளதொள சட்டை! 35
ஏறியும் இறங்கியும் ஏழெட்டுக் கிழிசலால்
மாறியும் மடிந்தும் தொங்கிடும் வேட்டி!
உழைப்பின் மிகுதியால் ஓதந் தாக்கிடும்
தலைப்புறம் மறைக்குமோர் தலைமுண் டாசு!
முண்டாசின் உட்புறம் கறுப்பும் வெளுப்புமாய் 40
உண்டு, இல்லை எனுமா றுரைக்குந் தலைமயிர்!
மொச்சைக் கொட்டை போல் இருந்த பல்லெலாம்
பச்சுப் பச்சென விழுந்திட்ட பைவாய்!
வாய்மிசை மருங்கிலும் முகவாய்ப் புறத்திலும்
தோய்ந்த வெண்மயிர் துளிர்த்த ஒளிமுகம் 45
தளர்ந்த மேனி; தளராத வீறு!
கிளர்ந்த நகைமுகம்; கிறக்கிடும் உரைத்திறன்!
உருக்குலைந் திட்ட உடல்தான் என்னினும்
கருக்குலை யாத கழகத் தமிழ், அவர்!
சாறு பிழிந்த சக்கைதான் எனினும் 50
வீறு குறையாத தீந்தமிழ் வேங்கை!

பாரதி தாசனார் பாடல்கள் முற்றும்
ஊரதி ரும்படி உணர முழக்கித்
தெருத்தெரு வாகத் திண்ணை திண்ணையாய்த்
திருக்குறள் பயிற்றிடும் திறல்மிகு ஆசான்! 55
அலைவுறும் விழிகளால் அள்ளி விழுங்கி
உலைப்பட் டடைபோல் உருப்பல சமைக்கும்
அங்காந்த நெஞ்சம்! அயர்விலா விளைவு!
மங்காத உணர்வு! மலையாத துணிவு!
‘உருவுகண் டெள்ளாமை வேண்டும்’ என் குறட்கே 60
ஒருதனி உருவமாய் உலவுந் திருக்குறள்!

சட்டைப் பையினுள் கைவிட் டெடுத்தால்
கற்றை பழந்தாள்; கணக்கிலாக் குறிப்புகள்!
கடைக்குறிப் பன்று! காலங் காலமாய்
இடையிடைக் கேட்டவை, எண்ணத் தெழுந்தவை, 65
பாக்களின் அடிகள், பற்பல கருத்துகள்,
நீக்கமற் றவரின் நினைவினில் தோய்ந்த
குறட்பா விளக்கம்,எனுந்தாட் குவியல்!
வரவும் செலவும் சட்டைக்கு வாரா,
கைப்பிடி அறுந்து தொளையிட்டு முடிந்த 70
பையொன்று கையில்; அதனுள் பலபடி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/156&oldid=1446218" இலிருந்து மீள்விக்கப்பட்டது