பக்கம்:கனிச்சாறு 7.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112  கனிச்சாறு - ஏழாம் தொகுதி

மூர்த்திக் குப்பம் எனும்மூ தூரின்
சீர்த்திக் கிவருடைச் சிறப்பைக் கூறலாம்!

அஞ்சற் காரராய் ஆற்றும் பணியுடன்
எஞ்சும் பொழுதெலாம் எந்தமிழ்த் தொண்டராய் 75
உலாவரு கின்றார்; ஊரவர் இவர்பால்
பலாப்பழத் தீக்களாய்ப் பறப்பதைப் பார்க்கலாம்!

மடல்கள் கொடுப்பார்; மக்களைக் கண்டால்
சடக்கென இறங்குவார்; சாலையென் றாலும்,
சிற்றுண்டி, தேநீர்ச் சிறுகடை யெனினும், 80
வெற்றிலை பாக்கு விற்பவர் என்னினும்,
அவலிடிக் கின்ற ஆயாள் எனினும்,
துவளாத நெஞ்சோடு துணிந்து, ஆங் கிறங்கி,

நலங்கேட் பதுபோல் நாலைந்து குறட்பா
வலிந்து புகுத்தித், தமிழ்வர லாறு, 85
“படிபடி” என்னும் பாவேந்தர் பாடல்,
அடிதொறும் எதுகை அடுக்கி வரும்,
‘சத்தி முத்தப் புலவ’ரின் பாட்டுள் அவர்
ஒத்த நிகழ்ச்சிக் கோரிரண் டடிகள்
நொண்டி யடிப்பது போல்சில நொடிகள் 90
வண்டியை ஒருகையில் பிடித்த வாறே
கொட்டி விட்டுக் குபுக்கெனத் தாவி
ஒட்டு வண்டியை ஓட்டிச் செல்லுவார்!

‘தென்மொழி’ப் படைஞர்க்கு அடைவீடு அவர்மனை!
பன்மாண் திறலோ டிதழ்வினை பகிர்ந்து, 95
தேர்ந்து முடித்துத் திங்களில் ஒருமுறை,
காரியும் ஞாயிறும் கடற்கரை அடுக்கும்
முழுப்பொழு தெல்லாம் மூர்த்திக் குப்பம்
திருக்குறள் பெருமாள் சிறுகுடில் திண்ணை
தூளி படுக்கும்!
                              தென்மொழித் தம்பியர் 100
தோளொடு தோள்கள், தூய்தமிழ் நெஞ்சுகள்
கலந்துற வாடும் கருத்துப் பொழிவுகள்,
புலந்துண வுண்ணும் பொலிந்த காட்சிகள்,
நாட்டுதற் கியலா நாடக இலக்கியம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/157&oldid=1446219" இலிருந்து மீள்விக்கப்பட்டது