பக்கம்:கனிச்சாறு 7.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  117


இந்திய படைஞர் வீரம் !

மொழியுரிமை விடுதலைப்போ ராய்மு கிழ்ந்து
முசுபிர்இ ரகுமானின் தலைமை யின்கீழ்
வழியொன்று கண்டிடவே எழுச்சி கொண்ட
வங்கத்துப் புலிக்கூட்டம் வேண்டி நிற்க
‘வழியன்றே; எரிபந்தம்! எங்கள் கைகள்
வேலன்றே, 5வேட்டெஃகம்! தோள்கள் குன்றம்!
பழியன்றே எங்கட்கு! பாக்கித் தானே
பார்த்துக்கொள்’ என்றெழுந்தோம்!
துணைநின் றோம், நாம்! 9

நாமென்றால், நம்படைகள்! அரிமாக் கூட்டம்!
நரிக்கூட்டம் நடுங்கிற்று; பாய்ந்தோ டிற்று!
“தாமெ”ன்று “தூமெ”ன்று துவைத்திட் டார்கள்!
தரங்கெட்டுச் சிதறிற்று, படைகள்! ஐயோ!
‘ஈமென்’றார்; ‘ஆம்’ என்றார், எவர்தாம் விட்டார்?
இருகிழமை போர்மூட்டம்! அடடா; த்சொ! த்சொ!
தீமென்ற வாயினராய்த் துடித்தார்! நம்மின்
செருத்தலைவர் தம்காலைத் தொட்டார்; விட்டோம்! 10

இந்தியர் ஒற்றுமை !

ஐம்பத்துக் கோடியரும் ஒன்றாய் நின்றே
அரசுக்குக் கைகொடுத்த மாட்சி தன்னை
6மொய்ம்பற்ற கோழையரும் உணர்வ துண்டோ?
மூக்கற்ற தோல்விக்குப் பேச்சும் உண்டோ?
பைம்புற்கள் குத்துவதால் களிறு சாமோ?
பாக்கித்தான் படைநமக்கிங் கெந்த மூலை?
ஐம்புலனும் வென்றான்முன் ஆற்ற லற்ற
அரைக்கிறுக்கன் என் செய்வான்? தோற்றுப் போனான்! 11

நம் வெற்றி:

வாயுரத்துக் கத்திநின்றான் யாகி யாக்கான்!
வயிரத்துத் தோள்களெல்லாம் எழுந்து நின்று
பாயிரத்தைப் பாடுகையில் படுத்துப் போனான்!
பாட்டொன்றை முடித்திருந்தால் என்ன வாகும்?
நாயுரத்தை நம்பிஅமெரிக்கன் வந்தான்;
நம்முரத்தை நம்பியன்றோ நாமிருந்தோம்!
ஆயிரத்து நானூறு சதுரக் கற்கள்
அன்றோ நாம் பெற்றநிலம்! இழப்பைம் பத்தே! 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/162&oldid=1446225" இலிருந்து மீள்விக்கப்பட்டது