பக்கம்:கனிச்சாறு 7.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


காட்டு விலங்குகள்போல் கத்தும் கருவியிசை!
பாட்டோ புயல்மழைசேர் பண்ணாகும்! - நீட்டுகின்ற
நெட்டிழுப்போ வெண்மூக்கு நீள்காதுப் பாடகனை
விட்டெழுப்பி யோட்டும் விரைந்து! 8

பெருங்குருகு நாரை இசைநுணுக்கம் தாளம்
ஒருங்குணர்ந்த பாப்புலவர் ஓர்கால் - வருங்கடையில்
இக்கால் பயிலும் இசைகேட் டுடனிறப்பார்;
எக்காலுந் தாம்பிறவார் இங்கு! 9

இந்தியிசை மேலை இழுப்பலிசை எல்லாமும்
செந்தமிழின் நல்லிசையைச் சீரழிக்கும் - நொந்ததமிழ்
உள்ளமே நீ இனிமேல் ஒப்பாரி வைத்திடுக!
பள்ளமுன் காதுப் பாறை! 10

இழுக்குடைய பாட்டிற் கிசைநன்று; நன்று
மழுக்குடைய புல்லிசைக்கு மாய்தல் - புழுக்கறையுள்
பட்டதே போலுமிந்நாள் பாட்டென்றால், பாம்பெடுத்து
விட்டதே போலும் இசை! 11

புல்லிசையில் இன்னே புழுங்குமனம் சுந்தரர்தம்
நல்லிசையில் ஆடி நனைந்ததே! வல்ல இசைப்
பாவாணர் சுந்தரரால் பண்டைத் தமிழ்ப்பண்கள்
மேவாவோ இவ்வுலக மேல்! 12

பண்ணாய்வுப் பாவாணன் பாடும் தமிழிசையில்
புண்ணாகிப் போனவுளம் பூத்ததே! - மண்ணாகிப்
போகட்டும் புல்லிசைகள்! பூக்கட்டும் சுந்தரர்தம்
பாகிட்ட செந்தமிழ்த்தீம் பண்! 13

சுந்தரே சன்றன் சுரும்பாரும் இன்னிசையில்
செந்தமிழே ஆர்க்கும் சிறப்பறிவார் - எந்தமிழை
முத்தமிழே என்று முழங்காரோ? பின்வியந்தே,
அத்தமிழ்க்கா காரோ அரண்? 14

அறுபானாண் டாகும் அகவையினான்; மேலும்
அறுபானாண் டந்தமிழ்க்கே ஆகி - மறுபோக்கிப்
பண்ணாய்ந்து செந்தமிழ்த்தீம் பாவில் இசையேற்றி
விண்ணாய்ந் திடுக வியந்து!

-1974
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/173&oldid=1446241" இலிருந்து மீள்விக்கப்பட்டது