பக்கம்:கனிச்சாறு 7.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  129


93

ஈரங்கொள் தமிழ்போல்
அவன்புகழ் என்றும் இருப்பதுவே!


சிங்கை மலையகத் தமிழரை ஒன்றாய்ச் சேர்த்திணைத்துத்
தங்கள் மொழி, இன உணர்வினை
ஊட்டித் தமிழ்வளர்த்துச்
செங்கதி ரோடும் நிலவொடும்
விண்மீன் செறிவொடும் போய்த்
தங்குதல் கொண்டான் சாரங்க பாணியென் தலைமகனே!

இன்பத் தமிழ்மொழிக் கிராப்பகல்
தன்னை ஈந்துயர்ந்தோன்!
அன்புத் தமிழினம் உயர்ந்திட என்றும் ஆர்த்திருந்தோன்!
என்புத் தசைநார் குருதியெல் லாமும் இனிதளித்துத்
தன்புத் துயிரையும் தந்தான் தன்னினம் தழைப்பதற்கே!

மொய்ம்புத் தமிழ்க்கே தாளிகை தோற்றி முரசறைந்து
நொய்ம்புத் தமிழரைத் திண்ணிய ராக்கி நொடிவகற்றச்
செய்ம்புத் திளையவன் போல உழைத்த செம்மலவன்!
அய்ம்பத் தாண்டுக் காலமென் னினத்தை ஆண்டவனே!

கல்குலைந் துருகிக் கலங்கினும் கலங்காக் கடமையினோன்!
சொல்குலைந் துரையா,வினைகுலைந்
தியற்றாச் சோர்வறியான்!
பல்கலை தேரும் மாணவர் பயிலப் பைந்தமிழை
எல்கலை ஞாயிறாய் ஏற்றிய திறலோன்; இணையிலனே!
பாரெங்கு முள்ள தமிழரின் இனத்தைப் பராவிடுவோர்,
சாரங்க பாணியென் தலைவனை ஓர்க! சார்ந்திடுக!
வீரங்கொள் அன்னவன் வினையினைப்
போலும் வினைவிளைக்க!
ஈரங்கொள் தமிழ்போல் அவன்புகழ்
என்றும் இருப்பதுவே!

-1974
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/174&oldid=1446245" இலிருந்து மீள்விக்கப்பட்டது