பக்கம்:கனிச்சாறு 7.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  149


(இசைமாற்று)


பொன்னுக்கும் பட்டுக்கும் விழைவில்லாத் துறவி!
பொழுதுக்கும் காலாறா நடைபாவும் இறைவி!
சின்னக்கைக் குழந்தைக்கும் குழந்தையவள் நெஞ்சம்!
சீறியெழின் பெண்புலியின் சீற்றத்தை விஞ்சும்! (இனிது)

சிறு அழைப்பும் தவிராத ஓட்டநடைக் காரி!
சிணுங்கிவிட்டால் வணங்காத சினந்தேங்கும் ஏரி!
மறுமொழியும் பேசாமல் வினைசெயினும் செய்வாள்!
மனம் நோக விட்டாலோ கண்மழையும் பெய்வாள்! (இனிது)

பிள்ளைகள்மேல் உயிர்மொய்க்கும் பெருந்தாய்மைப் பேறு!
பெற்றவரை மறவாத நறும் பெண்மைக் கூறு!
கள்ளமிலா உள்ளத்தின் கனிவு நிறை தெய்வம்!
கரவில்லா மொழியுதிர்க்கும் அருளுணர்வு மெய்மம்! (இனிது)

நல்லிளமைப் போதினிலே எனைத்தேடிக் கண்டாள்!
நறும்பிறவி உயிர்தொடர்பால் கணவனெனக் கொண்டாள்!
சொல்லுழவன் எனக்கவளை முழுஈகம் செய்தாள்!
சொந்தம் நான் முழுதுமவட் கென்றுரிமை கொய்தாள்! (இனிது)

எனக்கெனவே வாழ்கின்றாள் எனக்கெனவே உயிர்ப்பாள்!
இனிவரும் எப் பிறவியிலும் எனைப்பிரிந்து வாழாள்!
தனக்கெனவோர் எண்ணமிலாள் செயலில்லாள் பேதை!
தாயுக்கும் தாயானாள் உயிர்கலந்தாள் கோதை! (இனிது)

இனியுயிர்க்கும் பிறவியிலே அவட்கடிமை செய்வேன்!
என்றனைநற் பெண்டாக்கித் தலைமையவட் குய்வேன்!
தனியுயிர்க்கும் நினைவில்லை, திறப்பாடும் இல்லை!
தாமரையாள் அன்புணர்வுக் கவளன்பே எல்லை! (இனிது)

-1981
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/194&oldid=1446991" இலிருந்து மீள்விக்கப்பட்டது