பக்கம்:கனிச்சாறு 7.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


124

பெரும்புகழ் பெறுக! (தெசிணி)


பாவலர் தெசிணி உள்ளம்
பண்பார்ந்த தமிழ்ப்பூஞ் சோலை!
ஆவலால் செந்த மிழ்க்கே
ஆக்கஞ்சேர் தொண்டு நோக்கில்,
மேவுறும் மரபுப் பாக்கள்,
மிளிரவே ‘கவிதை’ என்னும்
பாவலர் போற்றும் ஏட்டைப்
பயனுற நடத்து கின்றார்!

செந்தமிழ் வயலில் புற்கள்
செழிப்பன போலும் நாட்டில்
வந்தவர் மொழிகள் யாவும்
வளர்ந்திடத், தமிழோ தாழும்
நொந்திடும் நிலைக்கே உள்ளம்
நோகின்றார் குழுவில் ‘யாமும்
வந்துழைக் கின்றோம்’ என்றே
வந்தவர் தெசிணி யன்றோ?

முப்பத்தோ ராண்டுக் காலம்
முழுமையாய் ஈடு பட்டே
எப்பயன், வருவாய்,இன்றி
இதழொன்று நடத்தல் போல
மெப்புறும் செயலொன் றில்லை!
மேற்கொண்டோர் உணரு வார்கள்!
அப்புது மையும்,வி யப்பும்
அறிஞர்நம் தெசிணி செய்தார்!

உயர்பண்பு, நல்லொ ழுக்கம்,
ஊக்கம்,செந் துணிவு, கொள்கை,
அயர்வின்றி உழைக்கும் உள்ளம்,
அவியாத தமிழ்ப்பற்(று) உண்மை,
மயர்விலா அறிவுத் தேக்கம்,
மாண்புடை தெசிணி தொண்டு
பெயர்பெறும்! பெருமை சேர்க்கும்!
பெரும்புகழ் பெறுக! நன்றே!

-1992
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/209&oldid=1447022" இலிருந்து மீள்விக்கப்பட்டது