பக்கம்:கனிச்சாறு 7.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


127

அருமை மகள் தேன்மொழிக்கு!


அருமைமகள் தேன்மொழிக்கும்,
அன்பினிய தம்பிக்கும்,
அறிவுச் செல்வர்
பெருமை மிகும் அறிவனுக்கும்,
பெருங்கடமைத் தெள்ளிக்கும்,
பெரியம் மைக்கும்,
ஒருமையுளம் கொண்டு, நலம்
உரைத்து, இதனை வரைகின்றேன்;
உவகை கொள்வீர்!
திருமைஒளிர் நெஞ்சத்தின்
திரள்நலமும் வாழ்த்துகளும்
திகழ்க நன்றே!

தேனம்மா! நீநலமும்
தேறியது கண்டுமகிழ்ந்
தேன், என் உள்ளம்!
ஏனம்மா, மனச்சோர்வும்?
இதன்பொருட்டும் உடல்நலியும்!
இளைத்துப் போகும்!
வானமும், மா நிலமும் உள்ள
வரைநிற்கும் குறள்உரையை
வரைந்து கொண்டு,
நான் இம்மாச் சிறையில்முழு
நலமாக இருக்கின்றேன்;
நலிதல் இல்லேன்!

ஆதலினால் நீ எதற்கும்
அஞ்சாமல் துணிந்து நின்றுன்
அப்பா வைப்போல்
தீதெனினும் சோர்வின்றித்
திளைப்பெனினும் செருக்கின்றித்
தேர்ந்த தொண்டின்
மீதுயர்ந்த கொள்கையுடன்
மேந்தமிழ்க்கும் இனத்திற்கும்
தமிழ்நாட்டிற்கும்
காதலுற்ற நின்கணவர்
கடமை செய்தல் போல்அவர்க்குக்
கைகோப் பாயே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/211&oldid=1447025" இலிருந்து மீள்விக்கப்பட்டது