பக்கம்:கனிச்சாறு 7.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


எப்பொங்கல் போன்றேயிப் பொங்கல் இருப்பதால்
என்ன புதுமையென் றேவுளஞ்
செப்புதல் போலச் சிரிக்கும் வகையினைச்
சொல்லடி! பூவின் இளமுகை! 25

பண்டுயாம் பொங்கிய பொங்கலில் பார்ப்பனப்
பாதை யிருந்தது! ஈண்டெனில்
தொண்டு விரவி யறிவு படர்ந்துளம்
தோய்ந்த தடி புதுப் பாதையில்! 26

செந்தமிழ் நூல்களைக் கண்டுளம் பொங்கிடுஞ்
சிந்தை யிருந்தவர் ‘போகி’ யில்
வெந்தழலிற் பெருஞ் செந்தமிழ் நூல்களை
வீசி யழித்தனர் பண்டையில்! 27

மூடப் பழக்க வழக்க மழிந்தது!
முன்னையினும் தமிழ்ப் பற்றினை,
நாடிப் பறந்தனர்; எங்கணும் செந்தமிழ்
நாட்டங் கொண்டாரடி மக்களும்! 28

கோவில் குறைந்தது! பள்ளி நிறைந்தது!
கோவர சாட்சி மறைந்தது!
ஆவல் விரைந்தது செந்தமிழ்மேல்! மக்கள்
ஆட்சி மலர்ந்ததிக் காலையே! 29

அன்றுகண்ட பொங்கல் ஆரியப் பொங்கலாம்!
ஆனாலிது தமிழ்ப் பொங்கலாம்!
நின்று தலைநிமிர்ந் தேறு நடையென
நீ நடந் தாடி மகிழ்ந்திடு! 30

சங்கு நிறைகரை சூழ்ந்து, பொருவளஞ்
சேர்ந்து விளங்குபொன் னாட்டிலே,
‘பொங்குக பொங்கல்’என் றே,வுளம் பொங்கிப்
பொலிந்திடுக தமிழ்ப் பாட்டிலே! 31

-1952
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/221&oldid=1447058" இலிருந்து மீள்விக்கப்பட்டது