பக்கம்:கனிச்சாறு 7.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  177


132

பொங்கல் வாழ்த்து!


தங்கக் கதிர் முற்றித் தாழ்ந்தபின் போயதனைப்
பொங்குங் களிப்பிற்பொன் நெல்லாக்கிக் - சங்கொலிகை
மங்கையர் நல்லுலக்கை மாற்றிப்பின் புத்தரிசிப்
பொங்கியராய்ப் பொங்கிடுவார் நெஞ்சு!

தூய்மைப் புதுப்பானை தன்னில் அறிவென்னும்
தூய்மைப்பால் ஊற்றியுடன்
வள்ளுவர்சொல் - வாய்மைப்பால்
வார்த்தன்பும் சேர்த்து வகைசெய்து நற்பண்பைச்
சேர்த்துலகு பொங்கிடுக நன்கு!

-1954
 


133

தங்குக பேரின்பம் தழைத்து!


எத்திரு விழாவும் இன்தமிழ்ப்பண் பாட்டிற்கே
ஒத்திருக்க வில்லை உணர்கிலமே - பத்தியொடு
குத்தல் குதித்தல் குழவி மயிர்மழுக்கல்
கத்தல் கதறலெனக் காண்பவெலாம் - பித்தவிழா!
பாதிவிழா பார்ப்பார்க்(கு) ஒருபாதி நோற்பார்க்கு!
மீதிவிழா முற்றும் மதம்படுமே! - மோதுபனி
நீராற் குளிர்ந்து நிலைசாய்ந்த செந்நெல்லின்
போரால் மகிழ்ந்து புலன்காக்கும் - ஏராலே
இன்னார்க்கும் இட்டவர்க்கொன் றீயார்க்கு மீந்துவந்தே
பன்னாட்கும் காக்கும் பழனவர்க்கே - மன்னியநாள்
பொங்கற் றிருநாளே! பூந்தமிழின் நாட்டவர்க்குத்
தங்குகபே ரின்பம் தழைத்து!

-1955
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/222&oldid=1447060" இலிருந்து மீள்விக்கப்பட்டது