பக்கம்:கனிச்சாறு 7.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  183


என்று நமக்குளே
ஏற்றத்தாழ் வில்லையோ,
என்று நம்முளே
இழிவு, இகழ்(வு) ஒழிந்ததோ,
என்று நம்மவர்
உரிமைபெற் றுய்வரோ
அன்று தான்நமக்
கருமைப் பொங்கலாம்!

நமக்குள் ஒருவரை
நாம்தாழ்த் திடாமல்
நலிவு செய் திடாமல்-
நமக்குள் ஒருவரை
நமக்குள் அனைவரின்
நலம் தரும் நினைவைச்
சுமக்குநாள் அன்றே
சுவைதரும் பொங்கலாம்!

வாடிய மக்களின்
வாட்டம் தவிர்த்திட
நீடிய வளங்களை
நிலைக்கச் செய்யவும்,
நாடிய எல்லா
நலன்கள் கிடைக்கவும்
கூடிய அரசுசெய்
கொள்கைநாள் பொங்கலாம்!

ஆயும் அறிவியல்
மக்களுக் காகவும்,
தோயும் விளைவெலாம்
மக்கள் துய்க்கவும்,
நோயும் நொடிவும்
இலாதொரு நாளில்தான்,
வாயும் வயிறும்
வளம்பெறும் பொங்கலாம்!

-1989
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/228&oldid=1447071" இலிருந்து மீள்விக்கப்பட்டது