பக்கம்:கனிச்சாறு 7.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


148

இராசு - செயா.


இன்புறு நண்பர் இராசுவுக்கும் மேம்பொறைசேர்
அன்புறு தங்கை செயாவுக்கும், பின்பொருநாள்
சூழும் மணமென்றேன்! சூழ்ந்ததெனச் சூழ்ந்ததென
வீழும் முழவொலியும், வேட்பார்கள், வாழுமெனக்
கூறுகின்ற வாழ்த்தொலியும் கேட்டு மணமக்கட்
கேறுகின்ற இன்பும் விரைமலர்கள், நாறுகின்ற
நன்மணமும் காணுகிலே னென்றாலும் நல்வாழ்த்திற்
கென்மனமும் வந்துற்ற திங்கு!

-1960


149

அறவாழி - தாயம்மை.


(வளர்பிறை)


விழிநோக் கொன்றி விழித்தனர்காண்!
வேய்த்தோள் தடந்தோள் பிணைந்தனர்காண்!
பழிநோக் கின்றி ஈருடலம்
பயின்றுயிர் மாறிப் புகுந்தனர்காண்!
வழிநோக் கறங்கள் வாய்க்காவோ?
வாய்த்தவர்க் கின்பம் பாய்ச்சாவோ?
மொழிநோக் குண்மை பெறுமென்றால்
முதலாம் பிறையே வளருதியே! 1

நெஞ்சோடு நெஞ்சங் குயின்றனர்காண்!
நினைவொடு நினைவும் பயின்றனர்காண்!
துஞ்சலும், பழிப்பதும் இல்லாராய்
தூய்மை இல்லறந் தொடங்கினர்காண்!
விஞ்சும் பொருள்கள் விளையாவோ?
விளையின் மகிழ்வுந் தழையாதோ?
எஞ்சமி லெஞ்சொல் மெய்யுறுமேல்
இரண்டாம் பிறையே வளருதியே! 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/235&oldid=1447094" இலிருந்து மீள்விக்கப்பட்டது