பக்கம்:கனிச்சாறு 7.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


150

புலவர் சீனி.சட்டையப்பன் - மணிமேகலை.


எல்லையறும் அகன்புடவி ஒழுகலறா தியக்கிடுமோர்
வல்லிறையின் நுண்மனத்தே
உறைத்தெழுந்து முகிழ்த்தலரும்
பால்வழியின் அறநின்றார் பயன்கொளுவ வயின்சேர்ந்து
நூல்வழியின் உறவாடும் இருமணியின் புணர்வமையக்
குறிப்பேய்ந்த மடநல்லாள் ஐம்புலனும் இசைவார
மருப்பேய்ந்த களிற்றானை விழிவிழுங்கி உளக்கொண்டே
இருநோக்கின் ஒருபோக்காய் இயைவறாக் கைநெகிழாப்
பெருவாழ்விற் கிணைபோக்கும் பெற்றித்தே மணம்என்ப!

அவ்வழிக் கிளர்வூறு மெய்யுணர்வோர்
வளந்துய்க்கும் பெரும்பொழுதில்
விளைநிலத்துப் பெயலேபோல் கையிரந்தார்க் குள்ளிரங்கிக்
குரவோர்க்குத் திறம்பேணிக் குடிசெய்வார்க் கடிபோக்கி
உரவோர்க்கு நெறிகாட்டு மஃதொன்றே அறமென்ப;

அதுபிறழா மேற்சென்று புதிதுபுறத் துவக்குங்கால்,
கதலின்றி முதல்சேர்க்குஞ் சிதலேபோல் தாமுயன்று
புறவழி கூட்டின்றி அறவழி குறைவின்றிப்
பொறைகெடா துயர்வீட்டு மஃதொன்றே பொருளென்ப;

அதுகொண்டு, வலத்தது வல்லறமா
இடத்தது செம்பொருளா
நலங் கூடத் துணைபுணர்ந்து நட்டாரும் உள்குளிரப்
பொழுதுங் காலமும் இடனொடும் பொருந்திவர
வழுவிலா நுகர்வாரு மஃதொன்றே இன்பென்ப;

அனைத்து ஆக,

இன்பும் பொருளும் அறமும் இணைய
அன்பொடும் அருளொடும் இன்பினுந் துன்பினும்
ஏறியது தாழாது இறங்கின் வாழாது
மாறிலா நெஞ்சின் மணிமே கலையொடு
பொறைபூண் விரைமொழி நிறைதமிழ்ச் செல்வன்
சட்டை யப்பனாந் தமிழ்பயிற் றாளன்
முட்டறத் துவங்கிய வாழ்க்கை
எட்டுணை இடரும் இன்றி இயங்குகவே!

-1963
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/239&oldid=1447104" இலிருந்து மீள்விக்கப்பட்டது