பக்கம்:கனிச்சாறு 7.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  213


177

எண்சுவை எண்பது’ நூலுக்குப் படையல்!

பாவேந் தர்எனும் பாரதி தாசனார்
நாவேந்தி வந்த நற்றமிழ் அமிழ்தம்
செத்துக் கிடந்த செந்தமிழ் மரபைப்
புத்துருக் கொடுத்துப் புதுக்கிய பொழுதில்
எண்சுவை எண்பது எனுமிவ் விலக்கியம்
பண்சுவை மணமும் பரப்பிய தாகலின்
எவரடித் துரைக்கினும் இணையிலா,
அவரடிக் கிதுமோர் அணிமலர் ஆகுமே!

-1969


178

‘அறிவு’ இதழ்க்கு வாழ்த்து!


தமிழ்க்குடி புகுந்த நெஞ்சம்;
தனித்தமிழ் முழக்குஞ் செவ்வாய்;
தமிழ்க்கொடி தாங்குந் தோள்கள்;
தமிழ்நலம் புனைந்த கைகள்;
தமிழ்க்குடிச் சிறப்பு நோக்கி
இராப்பகல் நடக்குங் கால்கொள்
தமிழ்க்குடி மகனார் போக்கும்
தாளிகை அறிவின் ஊற்றே!

நினைவாற்றல் தோய்ந்த வேழம்;
நிலைப்பாற்றல் வாய்ந்த வேங்கை;
வினையாற்றல் பூண்ட தேனீ;
விளைவாற்றல் மிக்க நன்செய்;
புனைவாற்றல் கொள்சி லந்தி
போல்தமிழ்க் குடிம கன்றான்
அனையாற்றல் கொண்டு போக்கும்
‘அறிவு’ இதழ் நிலைத்து வாழ்க!

-1970
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/258&oldid=1447138" இலிருந்து மீள்விக்கப்பட்டது