பக்கம்:கனிச்சாறு 7.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௨௫

வித்து போன்றிருக்கிற நிலையில் தம்மை அவரவர்களின் பெறுகைக்கும், உழைப்புக்கும் ஏற்ப விளைவிக்கலாம் என்று தம்மை விளக்குகிறார் பாவலரேறு.

50. பிழைப்புக்காக அறிவையும் பாழாக்கிடும் நடிப்பார் ஆட்சிக்குள் தாமிருக்கிறோமே என வருந்திப் பாடியது இப்பாடல். ம.கோ.இரா. மறைவை யொட்டி வெளிவந்த தென்மொழியின் அட்டைப்பாடல் இது.

51. தமிழ் மொழி, இன, நாட்டு முயற்சிக்காக அரசின் ஒடுக்குமுறைகளுக்கிடையே தம் எதிர்நீச்சல் வாழ்வைப்பற்றி எவரும் அக்கறைகொள்ளாமல், இணைந்து செயல்படாமல், தம்மைப் புகழ்ந்து கொண்டிருக்க வேண்டாம் என்றும், தம் மறைவுக்குப் பின்னரே தன்னுடைய நன்மை வாழ்வு புரியும் என்றும் வருந்திப் பாடிய பாடல் இது. தமிழ்ச்சிட்டு ஆசிரியவுரையாய் வந்த ஒரே தனிநிலைப்பாடல் இது.

52. தஞ்சையில் தமிழர் தேசிய இயக்கம் கடந்த 1990 சூன் 9,10 ஆம் நாட்களில் கூட்டியிருந்த தமிழர் தன்னுரிமை மாநாட்டினை அப்போதைய கலைஞர் அரசு தடை செய்ததோடு, அல்லாமல் அத்தடையை மீறி மாநாடு நடத்தமுயன்ற எண்பது பேர்களுக்கும் மேலானவர்களைச் சிறையிலடைக்கவும் செய்தது. பதினைந்து நாள்களுக்குப்பின்னர் பிணையலில் வெளிவரவேண்டிய நிலையிலேயே அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பெற்று நடந்தது. அவ்வகையில் சிறையிலிருந்து வந்த பின்னான தென்மொழியில் வெளிவந்த பாடல் இது. தம் உடலைப் பாறையில் தேய்த்து உரசினாலும் தம் உறுதியில் மாற்றமில்லை என்று கொள்கை முழக்கமிடும் ஐயா பாவலரேறு அவர்கள் தம்மை எத்தனைமுறைச் சிறையிலிட்டாலும் தம் கொள்கை மாறாது என்று வீறுரைக்கின்றார்கள்.

53. அறிஞர்களைப் பேணாமல் பாழ்செய்வதாகவே அரசு ஆளுமை செய்து கொண்டிருப்பதைக் கண்டு மனம் வருந்திய பாவலரேறு ஐயா அவர்களின் உள்ளச் சிதைவுகள் பாடலாய்.

54. 91-ஆம் ஆண்டு செபுதம்பர்த் திங்களில் ஈழத்துக்கு சார்பாகப் பேசியதால் சிறைப்படுத்தப்பட்டு அடக்குமுறைக்குள்ளான ஐயா அவர்கள் தாம் சிறையினின்று மீண்டபின் வெளிவந்து ‘தென்மொழி’யில் எழுதியது. பொதுமை உணர்வற்ற போலியரைப் போலவோ அறிவற்ற மூளியர்போலவோ தாம் இல்லை என்பதாக விளக்குகிறது பாடல்.

55. தம் உயிர் வாழ்க்கைக்குத் தாம் ஏற்றுக்கொண்ட கொள்கை உறுதியே காரணம். மற உணர்வு உள்ளத்தில் நிறைந்திருப்பதால் இகழ்ச்சியும் புகழ்ச்சியும் தனக்கு வெற்றொலிகளே என்கிறார் பாவலரேறு.

56. ‘தடா’க் கொடுஞ்சிறையுள் ஏழு மாதங்கள் அடைக்கப்பட்ட நம் ஐயா அவர்கள் பிணை விடுதலையில் வெளிவந்தபின் தென்மொழி'யில் எழுதிய பாடல் இது.

57. வடநாட்டுப் பார்ப்பான்கள் வன்முறை செய்கையில் வளமனைக்குள் பேருக்குச் சிறைவைத்திடும் பேரரசுகள், தமிழ்நாட்டுரிமையைக் கோரிக்கையாய் வைத்திட்டாலே ‘தடா’எனச் சிறைப்படுத்துவதோ, இதுதான் குடியரசு நாட்டின் நடைமுறையா என்று குரலெழுப்புகிறார் பாவலரேறு ஐயா அவர்கள்.

ஐயா அவர்கள் தாம் 1993-ஆம் ஆண்டில் ‘தடா’க் கொடுஞ் சட்டத்தின் கீழ்ச் சிறைப்படுத்தப் பட்டிருக்கையில் சிறைக்குள் எழுதிய பாடல் இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/26&oldid=1445495" இலிருந்து மீள்விக்கப்பட்டது