பக்கம்:கனிச்சாறு 7.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

216  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


181

தமிழ்நூல் - பாயிரம்!


முப்புடை முந்நீர் முழக்கிடைப் படுத்த
தெப்பத் தன்ன திகழ்ஞா லத்தின்
தொன்னிலப் பரப்பெனத் துவரக் காட்டிய
கன்னிக் கண்டத்துக் கட்புலந் தோன்றிப்
புகுதிரை நிவந்த வடமலைப் பொழிலகத்து
உலாவிப் படர்ந்தடி யூன்றி யுலகெலாம்
அளாவிய தீந்தமிழ் அஃகித் திசைந்து
கிழக்கரை நின்ற வழக்கொடு முரணித்
தொண்டுபடு திராவிடந் தோன்றித் தன்வயின்
பண்டுநிலை புதுக்கப் பருவுறுங் காலை,
உணர்வது வேலி உரையது வரையெனா
உரையது சீரே உறுவினைத் தகவெனா
உறுவினைந் தகவின ஒத்தது பயனெனா
பயனிறை வின்றிப் பாரும் பாழெனா
முன்னி நயனிறை மூளல் வேண்டி
மன்னிய புலவன் சரவணத் தமிழன்
தேவ நேயன் திருத்திய தெளிதமிழ்க்
கேவலன் றானென வெடுத்துக் காட்டி,
எழுத்துமுதல் சொல்லா உறுப்புபுணர் பொதுவா
ஒழிபுதொட ரீறா வோரேழ் இயலுள்
காப்பிய நூலொடு கழகம் பயின்று
யாப்பிற் றொகுத்த காப்புடைத் தமிழ்நூல்
புதுவரி வெடுப்பினும் புதுமொழி வழக்கினும்
எதுமுறை நிலைப்பென விறப்ப வெண்ணா
வோரிரு கொள்கை உரைத்தா னெனினும்
பாரவ னூற்குப் பராவுக பயனே!

-1972
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/261&oldid=1447141" இலிருந்து மீள்விக்கப்பட்டது