பக்கம்:கனிச்சாறு 7.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  219


186

‘தனித்தமிழ்’ நூலுக்கு அணிந்துரை!


தமிழ்மொழித் திருவைப் பிறமொழித் திரிபால்
கமழ்மணம் நீக்கும் கயமையைக் கடிந்தும்,
பொருள்நலம் சிதைக்கும் புன்மையைத் தடுத்தும்,
அருள்நிறை மறைமலை அடிகள் தொடங்கிய
தனித்தமிழ் இயக்கத் தனிவர லாற்றையும்,
முனித்தெழுந் தறிஞர் கொள்கை முழக்கி
உலையாத் தொண்டால் உலகம் பரப்பிய
மலைபோல் முயற்சியின் மாண்பையும் விளக்கித்
தென்மொழிப் படையின் திறல்மிகு விறலோன்
புன்மொழி சூழினும் புதையா நெஞ்சினன்
தமிழ மல்லனின் ‘தனித் தமிழ்’ என்னும்
அமிழா உணர்வினால் ஆக்கிய இந்நூல்,
பல்வகைத் திறனொடும் பயன்மிகு குறிப்பொடும்
நல்வகை அமைப்பொடும் நஞ்சினார் நடுங்க
நனிவெளிப் பட்டது; நற்பயன் கொண்டது!
இனி, ஒளி பரப்பி எந்தமிழ் இயக்கம்
யாண்டும் பரவிட இந்நூல் உதவித்
தூண்டும் தமிழரைத் தூய்தமிழ் காக்கவே!

ஆரிய மொழியால் தமிழ்மொழி அடைந்த
பாரியக் கலப்பும் தமிழினப் பழிப்பும்
நீங்கிட உதவிய நெடுந்தகை அறிஞரும்
தூங்கிடா துழைத்த தொண்டரும், குழுக்களும்
எவரெவர் எவையெவை எனவகைப் படுத்தித்
தவறெதும் சூழாத் தகவுரை யோடு
தென்மொழி மல்லன் தீதறப் புனைந்த
இன்மொழி பயிலும் இனியநூல் இதுவாம்!

செந்தமிழ் மொழியின் முந்திய நிலையும்
வந்தவர் புகுத்திய வறுமொழிக் கலப்பும்
கலப்பு நிகழ்ந்த காலமும் கரணமும்
உலப்பால் தமிழ்மொழிக் குற்றபல் இழிவும்
கேடும் இவையெனக் கீண்டி விளக்கி,
நாடும் இனமும் மொழியும் நலம்பெற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/264&oldid=1447146" இலிருந்து மீள்விக்கப்பட்டது