பக்கம்:கனிச்சாறு 7.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  223


190

‘கவிதை’ வாழ்கவே!


தீந்தமிழ்ப் பாவலர்! ‘தெசிணி’யார் ஈன்ற
ஈர்ந்தமிழ்க் ‘கவிதை’ எனும்பாட் டிதழாள்
பத்தோடொன்பது ஆண்டுகள் பயன்மிகு ஆண்டுகள்
முத்துப் பாடல்கள் முழங்கி, இருபதாம்
ஆண்டில் மகிழ்வோ டடிவைக் கின்றாள்!
நீண்ட நன்னடை, நெடும்புகழ் பெறுக!

புல்லியர் சிற்சிலர் புலமை யின்மையால்
பல்லியின் உரைபோல் பயனிலா வரிகளைப்
பாடலென் பெயரில் பற்பலவெழுதி
ஈடருந் தமிழ்க்கே இழிவுகள் செய்யும்
கயமை மிகுந்தவிக் காலத்தில், தெசிணி
நயமிகு மரபு நலிவுறா வண்ணம்
செந்தமிழ்த் தீம்பா செறிய இயற்றலும்,
அந்தமிழ்ப் புலவரை ஆங்குரு வாக்கலும்,
உளத்தைப் பெரிதும் உவகையில் ஆழ்த்தும்!
வளத்தின் இலக்கிய வறுமையைப் போக்கும்!

‘கவிதை’ இதழால், கவின்மிகு பாக்களால்
செவிகுளிர் விக்கும் தீந்தமிழ்ச் செழும்பணி
இன்னும்பல் லாண்டுகள் இனிது நடந்தே
மன்னுக! பெரும்பயன் மணித்தமிழ் பெறுக!
பாவலர் தெசிணியார் பைந்தமிழ்க்
காவலர் ஆகுக! ‘கவிதை’ வாழ்கவே!

-1981
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/268&oldid=1447152" இலிருந்து மீள்விக்கப்பட்டது