பக்கம்:கனிச்சாறு 7.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  225


192

தமிழ்நிலம் இதழின் முகப்புப் பாடல்!


ஓய்ந்திடல் இல்லை,என் உள்ளமும்
உணர்வும் உயிர்ச்செரிவும்!
தேய்திடல் இல்லை,என் விரல்களும்
தாளும்! திரிந்தலைந்து
சாய்ந்திடல் இல்லை,என் உடலும்;
எனவே சலிப்பிலனாய்
மாய்ந்திடல் வரையும் உழைப்பேன்,
உரைப்பேன், மக்களுக்கே!

1983


193

எதிர்நீச்சல் நூலுக்குப் பாராட்டுப்பா!


தனித்தமிழ் நெஞ்சால் கற்பனையால்
தகுசால் கடவூர் மணிமாறன்
இனித்திடு பாக்கள் ஒருங்கிணைந்த
‘எதிர்நீச் சல்’நூல் தொகுத்தளித்தார்!
பனித்துளி அளவிற் சிறுவடிவம்
பரந்துள வான்போல் கற்பனைகள்!
கனித்திரள் போலும் பல்சுவைகள்
கதையும் உண்டு! மிகமகிழ்ந்தேன்!

யாப்பினிலே சிறுபிழைக்கும் இடமில்லை; தமிழ்நடையில்
யாங்கேனும் தடையே இல்லை;
தோப்பினிலே படர்ந்திருக்கும் குளிர்நிழல்போல் ஆங்காங்கே
தூயதமிழ் கொஞ்சும் பாங்கில்
பாப்புதையல் கண்டதுபோல் பல்வகைப்பா கண்டுவந்தேன்
பளிங்குநன்னீர்ச் சுனைகள் போல!
காப்புதனித் தமிழுக்காம் கடவூர்நன் மணிமாறன்
கற்கண்டுப் பாடல் நூலே!
காதல், தமிழ் அறம், பொதுமை எனுந்தலைப்பில்
கருத்துமிகக் கனிந்த பாக்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/270&oldid=1447154" இலிருந்து மீள்விக்கப்பட்டது