பக்கம்:கனிச்சாறு 7.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


201

சிவப்பு மலர்கள் - நூலுக்கு வாழ்த்து!


தென்மொழிப் பாவலர் கடவூர் மணிமாறன்
தெளிவுறப் பாடலில் வல்லவர் - அன்பு
திகழ்ந்தவர்; பழகிட நல்லவர் - அவர்
என்மொழி, என்னினம் என்நாடு உய்ந்திட
ஏராளமாய்எழுதிக் குவிப்பவர் - நாடு
என்றுய்யு மோ - என்று தவிப்பவர்!

உண்மைத் தமிழ்ப்பற்றும் உயரிய கொள்கையும்
உடலுழைப்பும் மிகக் கொண்டவர் - பல
உயர்தமிழ் நூல்களைக் கண்டவர் - அவர்
திண்மைச் செழுந்தமிழில் பாட்டும் உரையுமெனத்
தேர்ந்திடும் நூல்பல யாத்தவர் தமிழ்
தேறிய கல்வியில் மூத்தவர்!

பத்திரண் டாண்டுகள் பைந்தமிழ்ப் பாக்களைப்
பாடிப் பாடிஉளம் களித்தவர் -நறும்
பாக்களைத் தாய்த்தமிழ்க் களித்தவர்! - இனம்
புத்தெழுச் சியுடன்நறும் பொதுமையும் பெற்றிடப்
பொழுதெலாம் சிந்தனை செய்பவர்! - நலன்
புலர்ந்திடாப் பொழுதுளம் நைபவர்!

தூய தனித்தமிழில் புதுமை இலக்கியங்கள்
தோற்றித் தமிழ்த்தாயைப் போற்றுவார் இனத்
தொண்டைச் சிறப்புறவே ஆற்றுவார் - தமிழ்த்
தேய விடுதலைக்கே உணர்வும் உரமும் தரும்
தென்புக் கருத்துமிகச் சாற்றுவார் சீர்
திருத்தம் கூறிநிலை மாற்றுவார்!

சிவப்பு மலர்கள், எனப் பாடல் பலதொகுத்துச்
செப்ப முறஇதனைத் தருகிறார்! - முன்
சேர்த்த புகழில்நிலை பெறுகிறார்! - மனம்
உவப்பப் ‘பைந்தமிழின் சோலை’ ‘பாவலரின்
மேடை’ ‘வளரும்தலை முறை’ களாம் - பயன்
மிளிர்வும் கருத்துமிதன் நிறைகளாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/279&oldid=1447173" இலிருந்து மீள்விக்கப்பட்டது