பக்கம்:கனிச்சாறு 7.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


207

தமிழீழம் - நூல் படையல்!


அன்னையின் அன்பிற் கெடுத்தஓர் அன்புளம்
என்னைப் புரந்து போற்றிடும் என்றால்
அதுதான் வெங்காலூர் அருள்மணி உள்ளம்!
இதுதான் அவருடை அன்பினது ஆழம்
என்றுநான் முடிவுசெய் முன்னம் ‘இலை,இலை;
நின்றுபார்’ என்றெனை நினைந்திடும் உள்ளம்!

தொண்டுசெய் துள்ளமும் உடலும் தொய்ந்திட
மண்டிடும் வெப்பத் துயர்க்குமா மழைபோல்
அன்புரை பொழிந்தே ஆறுதல் கூறி, என்
என்பையும் குளிர்செய் இணையிலா நல்லுளம்!

வேரில் எருவும் வியன்குளிர் நீருமாய்
வாரி வழங்கிடும் வள்ளண்மை உள்ளம்!
இவ்வுடல் மறைந்தே என்னுயிர் நிலைக்குமேல்
அவ்வுயர் அணுவிலும் அருள்மணி அன்புளம்
ஒன்றி யிருந்திடல் உண்மைஎன் பதற்கு
நன்றியாய்ப் படைத்தஇந் நறுநூல் சான்றே!

-1990


208

செந்தமிழ்ச் செய்யுட்கோவை - நூலுக்கு
அணிந்துரை!


எழில்வாணப் பாவலர் பால்
இதுவரையில் யாமகிழ
மொழிநலமும் இனநலமும்
முகிழ்த்திருக்கக் கண்டிருந்தோம்!
மொழிநலமும் இனநலமும்
முகிழ்த்ததுடன், காதலர்செய்
விழிநலமும் இதழ்நலமும்
விளங்கிடநூல் யாத்தனரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/285&oldid=1447180" இலிருந்து மீள்விக்கப்பட்டது