பக்கம்:கனிச்சாறு 7.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  243


211

இறையரசனுக்கு வாழ்த்துரை!


பாவிலுரை செய்புலவர்
இறையரசன் முன்னர்
பாரறநூல் திருக்குறட்குப்
பாட்டிலுரை செய்தார்!
நாவிலுரை தூயதமிழ்,
நல்லுணர்வு நெஞ்சம்,
நந்தமிழின் முன்னேற்ற
நறுங்கொள்கை, வாய்மை,
மேவலுறும் பாமணியாம்
இறையரசன் இக்கால்
மேலுமொரு நல்லறநூல்
நாலடியார் ஆய்ந்தே
பாவிலுரை பகர்ந்துள்ளார்;
பயன்மிகவும் செய்தார்!
பைந்தமிழர் படித்துணர்க!
பாராட்டும் செய்க!

மண்டிலத்தில் உரைசெய்த
மாண்பதனால் கற்பார்
மனத்தில்உரை உடன்படியும்;
கருத்துநிலை நிற்கும்!
வண்டிமிரும் மலர்குடைந்து
தேன்சுவைத்து, நாமும்
வாழ்வதற்கே அடைசுட்டிப்
பயன்தருதல் போல,
கண்டுபொருள் தாம்சுவைத்து
நாம்சுவைப்ப தற்கும்
கவினுறவே உரைதந்தார்
பாவடிவில்! அன்னார்
தொண்டுபெரும் பயன்நல்கும்;
துய்ப்பவர்க்கே இன்பம்
தோன்றுமதோ டறம்விளங்கும்
தொன்தமிழும் வாழும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/288&oldid=1447184" இலிருந்து மீள்விக்கப்பட்டது