பக்கம்:கனிச்சாறு 7.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௮

கனிச்சாறு ஏழாம் தொகுதி


82. சிறுவர்களுக்கு மறைமலையடிகளை அறிமுகப் படுத்துகிறார் பாவலரேறு. எளிய வகையில் அடிகளாரின் ஏற்றத்தைச் சொல்லுகிறது பாடல்.

83. புதுவை மாநிலம், பாகூர் வட்டம், மூர்த்திக்குப்பம் என்னும் சிற்றூரில் வாழ்ந்த திருக்குறள் பெருமாள் என்னும் அருந் தமிழ்த் தொண்டரைப் பற்றிய எழில்மிகு பாடல் இது. ஆசிரியர் வரைந்த அவர் ஓவியத்துடன் தென்மொழியில் வந்தது.

84. ஆட்சியிலிருப்பவர்கள், கழகங்களைக் கட்டாயப்படுத்தித் தமக்குப் பட்டம் பதவிகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள். இவ் வழக்கம் கூடாது என்பதைக் கண்டித்த பாடல் இது. கலைஞர் கருணாநிதிக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பண்டாரகர் பட்டம் வழங்கியபொழுது, அவர் வருகையைக் கருப்புக்கொடி காட்டி மறுத்த மாணவர்கள் பலரைக் காவலர்கள் கடுமையாகத் தாக்கினர். அக் கொடுமையைக் கடிந்து எழுதியது இது.

85. கிழக்கு வங்க விடுதலைப் போராட்டத்தில் பாக்கித்தானியர் செய்த கொடுமைகள், இந்தியப்படை அப்பாக்கித்தானியப் படையை அடக்கியது முதலியன இப்பாட்டில் அழகு பெறக் காட்டப் பெறுகின்றன.

86. வெளிவராத பாடல். பழைய கோப்பிலிருந்து எடுத்தது.

87. திரு.வி.க. என்னும் மேலோன்!1973-இல் திருவாரூரில் நடைபெற்ற திரு.வி.க. சிலை திறப்பு விழா மலர்க்கு திரு.வி.க.பற்றி எழுதிய பத்துப் பாடல்கள்.

88. பாவாணரைப் பற்றிய சுருக்க விளக்கம். பாவாணர் அவர்களின் பிறந்தநாளுக்குக்கென எழுதப் பெற்றுத் தென்மொழியில் வெளியான பாடல்.

89. பெரியார் மறைவின் பொழுது பாடிய பாடல். பெரியாரைப் பற்றிய அருமையான படப்பிடிப்பு.

90. ஈழத்து ஓவியர் பெனடிக்ட்டு, ஐயா அவர்களை அமர்த்தி நேருருவை வரைந்தார். பாவேந்தர் உள்ளிட்டப் பலரையும் நேருருவாய் வரைந்தவர் அவர். அவர் ஐயா அவர்களைப்பார்ப்பதும், வரைவதுமான அந்நேர இடைவெளியில் - அவர் எத்தனைமுறை பார்த்தாரோ அதையும் கணக்கிட்டதோடு அவர் வரைந்து முடித்தவுடன் - ஐயா அவர்கள் அவரைப் பற்றிய இப்பாடலையும் எழுதிக் கொடுத்தார்கள்.

91. சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பேரகரமுதலி (Madras University Tamil Lexicon) என்ற ஓர் அகர முதலியைத் தப்பும் தவறுமாகவும் தகுதிக் குறைவாகவும் 1939இல் வெளியிட்டது. அதன் தொகுப்பாசிரியர் குழுவின் தலைவராகவும் உறுப்பினராகவும் எசு.வையாபுரி, முதலிய தமிழ்நலம் கருதாத பேராசிரியர் பலர் இருந்தனர். 1913 முதல் 1939வரை இருபத்தேழு ஆண்டுகள் இடைவெளி கொண்டதும், ஏறத்தாழ நான்கு இலக்கத்துப் பத்தாயிரம் உருபா செலவில் வெளிவந்ததுமான இவ்வகரமுதலியால் தமிழ்மொழியின் பல பெருமைகளும் தனிச் சிறப்புகளும் குறைவுற்றுப் போயின. அதனைப் பலவகையாலும் தொடர்ந்து கண்டித்து வந்தார் மொழிப் பேரறிஞர் ஞா.தேவநேயப்பாவாணர் என்னும் பன்மொழி ஆய்வு வல்லுநர். அதன் பொருட்டுத் தமிழ்ப் பகைவரால் அவர் புறந்தள்ளப் பெற்றார். எனவே வாழ்நாள் முழுவதும் அவர் தம் தகுதிக் கேற்பவும் அஃகியகன்ற அறிவு வெளிப்படுமாறும் ஒரு பதவியிலும் அமர்த்தப் பெறாமலும் வாழ்வியல் நலம் கெட்டும் வாழவேண்டியிருந்தது. இவரின் உண்மையான அறிவுத்திறன் நன்கு புலப்படுமாறு தென்மொழியில் தொடக்கக் காலத்திலிருந்து ஆசிரியர் பல கட்டுரைகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/29&oldid=1445498" இலிருந்து மீள்விக்கப்பட்டது