பக்கம்:கனிச்சாறு 7.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௩க


113. முனைவர் ஆறு.அழகப்பன் அவர்கள் சென்னையிலிருந்து செயற்பட்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின், தமிழ், சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழியாராய்ச்சி நிறுவன இயக்குநர் பொறுப்பை விடுத்து 21.7.1983 அன்று வீடுவந்து விருந்தேற்று விடை பெற்றபோது அவர்க்கு ஐயா தம் நூல்களின் தொகுதி ஒன்றைத் தந்து வாழ்த்தியெழுதிய பாடல் இது.

114. உலகத்தமிழின முன்னேற்றக் கழகம் தொடங்கப்பெற்றபின் - அதன் கொள்கைகளில் ஒன்றான “தமிழ்த்தேசியத்திற்குப் பொருந்திய பொதுவுடைமைப் பொருளியல்” என்பது குறித்துப் பாவலரேறு அவர்களின் சிறப்பாசிரியப் பொறுப்பில் வந்த ‘தமிழ் நிலம்’ இதழில் செய்திகள் நிறைய வந்தன. பொதுவுடைமை குறித்த அறிவியல் நோக்கினர். இந்தியப் பொதுவுடைமைச் சிந்தனையர் பலரும் தமிழ்த் தேசியப் பார்வைக்கு வரலானார்கள் - காரல் மார்க்கசின் சிறப்பினைத் தொழிலாளர் நாளையொட்டி வந்த தமிழ்நிலத்தில் பாடலாய்த் தந்தார் பாவலரேறு.

115. கல்லும் கரம்பும் கனலெறி காற்றும் நிறைந்திருந்தாலும் பல்லடம் எனும் ஊர் பாவலரேறு ஐயா அவர்களின் பாச்சிறப்பு பெற்ற விளைநிலமாய்த் திகழக் காரணமானவர்கள் தென்மொழி முத்துக்குமரனும், பல்லடம் ஆறுமுகமும், தென்மொழி துரையரசனும் ஆவர். அவர்களின் சிறப்புக்கே பாவலரேறு அவர்களின் இப்பாடல்.

116. நெஞ்சம் புண்ணாகிப் புலம்பிடும் பொழுதில் கண்ணாகித் தம்மைக் காத்திடும் அன்பினர் என வெங்காலுர்ப் பொற்செழியன் அவர்களையும் நெடுஞ்சேரலாதன் என்னும் முத்து அவர்களையும் அன்பு பாராட்டும் பாவலரேறு அவர்களின் பாடல்.

117. தீதிலா நெஞ்சொடும், தீந்தமிழ் உணர்வொடும் எதனைத் தாம் எண்ணினும் அதனை செயலாக்கும் குன்றா அன்பினர் என்றும் இப்பாடலில் அரிமா வளங்கோ அவர்களின் புகழ் பாராட்டுகிறார் பாவலரேறு ஐயா அவர்கள்.

118. தமிழக விடுதலைக்கான வரலாற்றில் ‘தமிழ் நாடு விடுதலைப் படை’ என்று படைகட்டிப் போராட எழுந்த வீரர் தமிழரசன் அவர்கள் 1.9.1987-அன்று ஒற்றர்களால் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டார். விடுதலைசேர் தமிழகத்தில் வீழ்ச்சியின்றி அவர்புகழ் வாழும் என்கிற பாவலரேறு ஐயா அவர்களின் பாடல்.

119. அப்பாத்துரையார் எனும் அறிவாட்சியர் அடங்கினரே என உள்ளங்குமுறுகிறார் பாவலரேறு அவர்கள்.

120. வாழ்வுரிமை மீட்கும் வாலையோர்க்குச் சான்றாளராய் வாழும் இனவீரன் நெல்சன் மண்டேலா என்று இப்பாடலில் புகழ்கிறார் பாவலரேறு.

121. பாவேந்தர் நூற்றாண்டு விழாவினையொட்டி அவர் சிறப்பை விரிந்துரைக்கின்றார் பாவலரேறு அவர்கள்.

122. அம்பேத்கரின் நூற்றாண்டு விழாவில் அவருக்கு நன்றி கூறி வாழ்த்துகிறார் பாவலரேறு.

123. பொன்விழாக் காணும் கோபிப்பாளையம் தூய திரேசாள் முதனிலைப் பள்ளியில் முப்பானாண்டுகளாய் ஏற்றமுடன் தொண்டாற்றிய புலவர் அரசு அவர்களின் தொண்டு செய் உளத்தினை உளம் நிறைந்து பாராட்டுகிறார் பாவலரேறு ஐயா அவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/32&oldid=1445501" இலிருந்து மீள்விக்கப்பட்டது