பக்கம்:கனிச்சாறு 7.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩௮

கனிச்சாறு ஏழாம் தொகுதி


203. கருவூர் பாவலர் கன்னல் அவர்களின் அழகுநடை கூத்தாடும் ‘பிஞ்சுதமிழ்’ நூலுக்குப் பாவலரேறு அளித்த வாழ்த்துப்பா.

204. நூலுக்கு வாழ்த்து! பாவலர் எழில்வாணன் அவர்களின் இழுக்கா யாப்புடைய நீ தமிழ்மகனா? நூலின் சிறப்புக்கு வாழ்த்துரைக்கிறார் பாவலரேறு.

205. ‘செயலும் செயல் திறனும்’ – நூல் படையல் ! காலச்சூழல்கள், வினையழுத்தங்கள், பொருள் நெருக்கடிகள் - ஆகியவற்றுக்கிடையில் தொடர்ந்து சில ஆண்டுகளாகத் ‘தமிழ்ச்சிட்டு’– சிறுவர் கலையிதழில் பாவலரேறு எழுதிய நெடிய தொடர் கட்டுரையே செயலும் செயல் திறனும். அவ்வரிய கட்டுரையைப் புதுவை அரிமா வளங்கோ அவர்களுக்குப் படையலாக்கிப் பாவலரேறு எழுதிய பாடலே இது. தொடக்கங்காலந்தொட்டே தென்மொழியோடு உழன்ற அன்பரே அரிமா வளங்கோ.

206. கடவூர் பாவலர் ப. மணிமாறன் அவர்களின் பாவேந்தும் செம்புரட்சி நூலே ‘சங்கே முழங்கு’ – என வாழ்த்துகிறார் பாவலரேறு.

207. தென்மொழி, தமிழ்நிலம் இதழ்களில் தமிழீழம் குறித்து வெளிவந்த பாவலரேறு அவர்களின் கட்டுரைகள், ஆசிரியவுரைகள், பாடல்களுடன் அரிய வரலாற்று முன்னுரையையும் கொண்ட தொகுப்பு நூலே தமிழீழம். அவ்வரிய நூலினைப் பாவலரேறு அவர்கள் தம்பால் உழுவலன்பு கொண்ட வெங்காலூர் அருள்மணிக்குப் படையலாக்கி எழுதிய பாடல் இது.

208. பாவலர் எழில்வாணன் அவர்களின் பண்ணியல்பு நலங்கொழிக்கும் ‘செந்தமிழ்ச் செய்யுட் கோவை’ நூலுக்குப் பாவலரேறு அவர்களின் அணிந்துரைப்பாடல்.

209. பாவலர் தெசிணியின் கவிதை இதழ் முப்பதாம் ஆண்டில் காலடி எடுத்துவைப்பதறிந்து ‘கவிதை’க்கு பாவலரேறுவின் பாடல்.

210. புதுவைப் பாவலர் தமிழமல்லன் அவர்களின் ‘பாவேந்தரும் பைந்தமிழும்’ என்னும் ஆய்வுரை நூலுக்குப் பாவலரேறு அவர்களின் அணிந்துரைப்பாடல்.

211. குறளுக்குப் பாடலிலேயே உரையெழுதிய பாவலர் இறையரசன் அவர்களின் அடுத்த முயற்சியாக நாலடியாருக்கு எழுதிய பாடல் உரைக்குப் பாவலரேறு எழுதிய வாழ்த்துரை இது.

212. தமிழ்ச்சிட்டு இதழ்களில் பாவலரேறு அவர்கள் எழுதிய ஆசிரியவுரைக் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்த 'இளமைவிடியல்' நூலுக்குப் பாவலரேறு எழுதிய படையல் வாழ்த்துப் பாடல் இது.

ஐயா அவர்களின் அம்மையார் குஞ்சம்மாள் அதற்கு முந்தைய ஆண்டு மறைவுற்றநிலையில் அவருக்குப் படையலாக இளமை விடியல் நூலைப் படைத்து எழுதப்பட்டது இப்பாடல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/39&oldid=1446001" இலிருந்து மீள்விக்கப்பட்டது