பக்கம்:கனிச்சாறு 7.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  21


12

கவிஞர் அன்றோ!


ஏறுகின்ற வெய்யில்போல் எழுத்து வானில்
எத்தர்களும் பித்தர்களும் புகுந்து விட்டார்
கூறுகின்ற வாய்மொழியும், கூட்டம் போட்டுக்
குவிக்கின்ற சொற்பொழிவும் காற்றில் மாயும்
மாறுகின்ற மக்கள்முன், அன்பும், தீய
மாசில்லா மனமுமதன் செயலும் சொல்லும்
ஊறுகின்ற நல்லூற்றாய்க் கருத்தின் ஊற்றை
உணர்வோடு தரவல்லார் கவிஞர் அன்றோ?

கேட்டலினும் இனிதன்றோ காண்டல்! இன்பம்
கிடைப்பதில்லை உரைநடையில்! அறிவை விட்டு
வேட்டதெலாம் உரைநடையில் தீட்டிப் பார்த்தால்
விளைவதில்லை ஒருதுளியும் இன்பம்! ஈண்டுக்
கேட்டதெலாம் உரைநடையாய்க் கொண்டால் காண்டல்
கிளர்த்தெழுந்த கவிதையன்றோ! வரைந்த ஒவ்வோர்
ஏட்டிலும் நற்சருக்கரையை இட்டாற் போல
இனிக்கின்ற மொழிசொல்வார் கவிஞர் அன்றோ?

பொருளற்ற பெரும்பேச்சைச் சொல்லைக் கேட்டால்
பொறுத்தாலும் பொறுத்திடுவர் மக்கள், ஆனால்
மருளற்றுக் கண்சிவந்து போவார் நூலை
மருவறக்கற் றுணர்ந்தவர்கள்! அவர்கள் காயும்
அருளற்ற உள்ளமதில் அழுந்தும் மக்கள்
அறிவற்ற நிலையினையும் கண்டு போர்த்த
இருளற்றுப் போவதற்கு அழகாய்க் கூறி
ஈர்த்தவரை உய்த்திடுவோர் கவிஞர் அன்றோ?

உரைநடையாய் அரைப்பக்கம் பாடஞ் செய்ய
ஒல்லுமோ? தொல்லையொடு படிந்தும் விட்டால்
விரைநடையாய் மக்கள்முன் கூறி நெஞ்சை
விறுவிறுக்கச் செய்யுமோ? செய்தாலுந் தான்
அரைகுறையாய்ப் போமன்றோ அப்பால் சென்றால்
அத்துணையும் செத்தொழிந்து போகாதோ? நல்
லுரைகூறும் கவிகளிலோ ராயிரத்தை
அவ்வாறே பதித்திடுவோர் கவிஞர் அன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/66&oldid=1446018" இலிருந்து மீள்விக்கப்பட்டது