பக்கம்:கனிச்சாறு 7.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


தேன்றமிழில் உளங்கிறங்கும் திறமேன் தந்தாய்?
திறமறியா மக்களிடைத் தமிழைப் பாய்ச்சும்
ஆன்றவியா எண்ணத்தை எனக்கேன் ஈந்தாய்?
அவலத்துத் துடிதுடித்(து) ஏன் புரள வைத்தாய்?
கான்றுமிழத் தக்கவரைக் கனிவால் பேணும்
கரவறியா உள்ளத்தை துயர்வந் தாலும்
சான்றாண்மை தவிராமல் வாய்மைப் போக்கில்
சலிப்படையாக் கவல்நெஞ்சை எனக்கேன் தந்தாய்?

இருள்மாந்தர் நிரம்பிவழி கின்ற நாட்டில்
இடமறியா துழலுகின்ற மான்போல், நெஞ்ச
அள்தேடி அலைகின்ற தனிஉள் ளத்தில்
அலைகின்ற நினைவுகளை எதற்கென் றீந்தாய்?
பொருள்தேடிக் கயமைசெய்து வாழ்வார் பாங்கில்
பொருட்கெனவே நடைநடந்து கண்ணீர் தேங்கும்
திருவுளத்தை விளக்கவிலா மாட்சி தன்னைத்
தீதறியா வல்லுணர்வை எனக்கேன் தந்தாய்?

முத்தரிக்கும் பெருஞ்செயலை எனக்குத் தந்தாய்!
முங்கிவரும் துயரலைக்குள் மூழ்கு வித்தாய்!
தத்தளிக்கும் உணர்வோடும் உயிர்ப்பி னோடும்
தவிக்குமெனக் கிடர்களையே துணைக்கு வைத்தாய்!
பித்தருக்கும் தீயருக்கும் பிழைசெய் வோர்க்கும்
பீடிழந்த பேடியர்க்கும் வினையால், சொல்லால்
கத்தரிக்கும் நெஞ்சினர்க்கும் இடையில் நின்று
கைசலிக்கும் உள்ளத்தை எனக்கேன் தந்தாய்?

குலைக்கின்ற தெருநாய்க்கும், மலந்தின் கின்ற
கூர்முகத்துப் பன்றிக்கும், சேற்றில் தோய்ந்தே
அலைக்கின்ற எருமைக்கும் கழுதை கட்கும்
அருவருப்புக் கொள்ளாமல் இருக்கும் உள்ளம்!
மலைக்கின்ற பெருந்துயர்க்கும் மலைந்த தில்லை,
மண்புனல்தீ வளிவிசும்பும் அஞ்சா(து); ஆனால்
உலைக்கின்ற தீயர்க்கும் கரவி னார்க்கும்
உள்நடுங்கும் நெஞ்சத்தை எனக்கேன் தந்தாய்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/73&oldid=1446029" இலிருந்து மீள்விக்கப்பட்டது