பக்கம்:கனிச்சாறு 7.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  29


தேறுமுறை அறியாமல் வழிகா ணாமல்
திசையெட்டும் தேடியலைந் துயிர்வ ருந்தி
ஏறுமுறை காணாமல் இளைப்பா றாமல்
ஏச்சினுக்கும் பேச்சினுக்கும் குலைந்தி டாமல்
வீறுகுறை யாமல்உளம் நிலைநிற் கின்றேன்;
வினைகளுக்கும் போக்குக்கும் இணைவார் தம்மை
நூறுமுறை நம்பிவிட்டேன்; நம்பு கின்றேன்;
நோகார்க்கு நோகின்ற நெஞ்சேன் தந்தாய்?

யாமாற்றும் பணிகளுக்கும் பொதுத்தொண் டிற்கும்
யாம்யாமென் றிணைந்துவந்து துணைநிற் பார்போல்
தாமாற்றும் வினைகளிலே தூய்மை காட்டித்
தாங்கிடுவார் போல்இருந்தே முடிவில் என்னை
ஏமாற்றும் திறன்மிகுந்தார் கரவை முன்பே
எடைபோட்டுப் பார்க்கின்ற திறன்தா ராமல்
நீமாற்றும் காட்சிகளின் அசைவிற் கெல்லாம்
நிலைகலங்கும் நெஞ்சத்தை எனக்கேன் தந்தாய்?

-1965




18

திறந்திருக்கும்!



திறந்திருக்கும், மற்றோரின்
துயர்காண, விழிகள்!
தீராத வெறுப்புற்றோர்க்
கின்மொழிகள் கூறத்
திறந்திருக்கும் என்றன்வாய்!
தெளிவான புலமைத்
திறமுடையார், அறமுடையார்
கூறுமொழி கேட்கத்
திறந்திருக்கும் இருசெவிகள்!
தேடிவரு வோர்க்குத்
திறந்திருக்கும் எனதில்லம்!
திறந்திருக்கும் படையல்!
சிறந்திருக்கும் உள்ளங்கட்
கெங்கும், எக்காலும்
செறிவன்பைச் செலுத்துவதற்குத்
திறந்திருக்கும் நெஞ்சே!

-1965
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/74&oldid=1446045" இலிருந்து மீள்விக்கப்பட்டது