பக்கம்:கனிச்சாறு 7.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32  கனிச்சாறு - ஏழாம் தொகுதி

பொருளுக்குப் பொய்த்தான் அல்லன்!
பொய்யுக்குப் புகழ்ந்தான் அல்லன்!
அருளுக்கு நெகிழ்ந்தான் அல்லன்!
அரசுக்குப் பணிந்தான் அல்லன்!

தாளுக்குப் பணிந்த தாளான்;
தண்மைக்குக் குளிர்ந்த தண்மை!
தோளுக்குத் துணைதோள் அன்னான்!
துயருக்குச் சுமைகள் தாங்கி!
வாளுக்குத் தலை கை தாழான்;
வாடிக்கை மொழிவே டிக்கை!
கேளுக்குக் கேளான்; உள்ளக்
கீழ்மைக்குச் சேய்மை யோனே!

(வேறு)


ஒருதனி நடந்தான்; நடப்பினில் உவந்தான்;
விரிந்ததிவ் வுலகம் என்னினும் வெருளான்!
நடந்தான் நடந்தான்; நடந்துகொண் டிருந்தான்!
தடந்தெரிந் தெடுத்த தகைமையில் நடந்தான்
இடர்கள் எதிர்ந்தன; என்னினும் நடந்தான்!
சுடர்வழி நோக்கிச் சோர்வற நடந்தான்,
படர்ந்த கொள்கைப் பாதையில்
நடந்தான் நடந்தான் நடந்துகொண் டிருந்தான்!

-1965

 


20

எம் வாழ்க்கை!



முன்புதை உண்டஎம்
முத்தமிழ்ச் சிறப்பினை,
மன்பதைக் குணர்த்தல்எம்
மண்ணுயிர் வாழ்க்கை!

-1968
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/77&oldid=1446048" இலிருந்து மீள்விக்கப்பட்டது