பக்கம்:கனிச்சாறு 7.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  39


என்மொழியை என்னினத்தை என்நிலத்தை மாற்றானிடம்
இட்டுவிட்டுச் சோம்பிவிட உள்ளம் இசையேன் - அவன்
எடுத்தெறியும் காசுக்கிரு கைகள் பிசையேன் - என்
தென்மொழியை, கண்ணொளியை, மூச்சுயிர்ப்பைச் சாகும்வரை
தேர்ந்தஉயிர்த் தொண்டெனவே ஆற்றிவருவேன் - வாழ்வு
தீர்ந்துவிடின் வேற்றுடலம் மாற்றி வருவேன்!

-1973



27

குளிர்தமிழ் உலவிடும் நெஞ்சமன்றோ?



எனைவேண் டாதவர் சிலரிங் கிருக்கலாம்
எனக்கு வேண் டாதவர் எவருமிலர்! - ஒரு
தினைவேண் டாதஓர் எறும்புளதோ?- பூந்
தேன்வேண் டாத,தே னீஉளதோ?

தமிழ்வேண் டாதவர் சிலரிங் கிருக்கலாம்;
தமிழ்க்குவேண் டாதவர் எவருமிலர்! - மணங்
கமழ்நறு மலரினை விரும்பிலரேல் - அவர்
கண்ணிலும் உணர்விலும் கசடுமுண்டே!

மலைவிரும் பாதவர் சிலரிங் கிருக்கலாம்;
மலைக்குவேண் டாதவர் எவருமிலர்! - இசைக்
கலைதரும் இன்பினை வெறுப்பவரேல் - அவர்
காதிலும் கருத்திலும் குறைகளுண்டே!

தென்றலை நிலவினைப் பகைப்பவ ரே - நறுந்
தீந்தமிழ் உளத்தினைப் பகைப்பவராம் - உயர்
குன்றினைத் தழுவிடும் அருவியைப்போல் - என்
குளிர்தமிழ் உலவிடும் நெஞ்சமன்றோ?

அன்புரை பலகால் வெளிப்பட லாம்; கடும்
அனலுரை சிலகால் புலப்படலாம்! - அதால்
துன்பிருந் தாலும்நற் பயனிருக்கும் - பின்
துயர்ப்படுங் கால், உளந் துணைவருமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/84&oldid=1446056" இலிருந்து மீள்விக்கப்பட்டது