பக்கம்:கனிச்சாறு 7.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  41


29

என்பும் தசையும் தமிழ் ஏற்றத்திற்கே!


அன்புக்கு நான் அடிமை;
அறிவுக்கு நான் தொழும்பன்;
என்பும் தசையும் தமிழ் ஏற்றத்திற்கே! - என்
இயக்க மெல்லாம் இழிவு மாற்றத்திற்கே!

தென்புக்கு நான் துணைவன்;
தெளிவுக்கு நான் கிளைஞன்;
முன்பும் பின்பும் ஒரு நோக்கினனே! - நான்
முனைப்பில் என்றும் நெகிழாப் போக்கினனே!

உண்மைக்கு நான் உறவன்;
உழைப்பிற்கு நான் மறவன்;
திண்மைக்கும் திண்மைநிலை சோராதவன்; - நான்
தேர்ந்துவிட்ட கொள்கையிலே மாறாதவன்!

இன்பத்தில் நான் கொடைஞன்
ஏழ்மைக்கு நான் தலைவன்;
துன்பத்தில் நான் உடலம் வேகாதவன் - பல
தோல்விக்கும் உள்ள உரம் சாகாதவன்!

பொய்மைக்கு நான் பகைவன்;
போலிக்கு நான் உரைகல்;
மெய்ம்மைக்கு நான் அலையும் வேட்கையுள்ளவன் - கூர்
வேலெடுத்தால் கீழ்வையாப் பூட்கையுள்ளவன்!

சொல்லுக்கு நான் வினைஞன்;
சோர்வுக்கு நான் எதிரி;
மல்லுக்கும் நான்மலையாத் தோளினனே! - தாய்
மண்ணடிமை நீக்கும் கை வாளினனே!

பகைவர்க்கு நான் கதிரோன்;
பழகற்கு நான் நிலவோன்;
தகைமைக்குத் தோழமைசெய் ஆவலனே! - செந்
தமிழ்மொழிக்குக் கண்துயிலாக் காவலனே!

-1975
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/86&oldid=1446059" இலிருந்து மீள்விக்கப்பட்டது