பக்கம்:கனிச்சாறு 7.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


30

எதுவசிறை என் செய்யும்?


‘தென்மொழி’ இதழைத் தமிழக அரசு
தன்பழி காத்திடத் தடைசெய் துவந்தது!

‘தென்மொழி’ இதழால் தீந்தமிழ் மக்கட்கு
என்பிழை நேர்ந்ததோ, யாமதை அறியோம்!

‘அருட்செல்வர் ஆட்சியை அரணிட்டுக் காக்க’
என்று எழுதினோம், இதுதான் பிழையோ?

இன்று பிறந்த இனமெலாம் உரிமையால்
நன்று சிறந்து நனிவாழ் கையிலே,
என்றோ பிறந்த ஏமாளித் தமிழினம்
தின்பதே தொழிலாய்த் தெருத்தெரு வாக,
ஊர்ஊ ராக, நாடுநா டாக
ஆர்க்கும்வல் லடிமையாய் அலைந்து திரிவதைப்
பதினா றாண்டாய்ப் பதைக்கும் நெஞ்சோடு
அதிர முழக்கினோம் அதுதான் பிழையோ?

‘குமுதம்’ போலும் குப்பை இதழ்கள்
தமிழைக் கெடுத்துத் தரந்தாழ்த் துகையிலே
தூய்தமிழ் நடையால் தொல்தமிழ் எழுதித்
தாய்மொழி காத்தோம்; தவறிது தானோ?

திரவிடர் உரிமைகள் தெருவெலாம் முழக்கியோர்
கரவடர் போல்தமைக் காத்துக் கொள்ளவே,
அஞ்சியும் கெஞ்சியும் அயலவர் ஆட்சிக்
கஞ்சி யோடுகிறார் எனக் கதறினோம்!
இதுதான் பிழையோ? ஏதென அறிகிலோம்!

ஒன்று மட்டும் உண்மையென் றறிவோம்!
‘இந்திரா’ எய்த நெருக்கடி அம்புக்குத்
‘தென்மொழி’ கேடய மாகத் திகழ்ந்து,
கலைஞர் மார்பைக் காத்து நின்றது!
நிலையெனில், நமக்கது விலையிலாப் பெருமை!
‘கலைஞரைக் காக்க’,வென் றெழுதிய கையைக்
‘கலைஞரும் காத்தார்’ என்பதா பெருமை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/87&oldid=1446060" இலிருந்து மீள்விக்கப்பட்டது