பக்கம்:கனிச்சாறு 7.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  43

காத்தவர் கைகளால் கழுத்து முரிபடும்
மாத்தவம் செய்தது ‘தென்மொழி’ மாதிகை!

பதினா றாண்டுமுன் பிறந்தது; வளர்ந்தது,
அதிர்நடை யிட்டே அரிமாப் போல
உரிமை முழக்கி உலாவந் திருந்தது!
நரிமை யாரிடை நம்மினம் காத்தது!
கனித்தமிழ் காக்கும் கலைஞரால் தன்பெருந்
தனித்தமிழ்த் தொண்டைத் தடுத்துக் கொண்டது!
அதுவரை ‘தமிழ்ச்சிட்டு’ அதன் பணி செய்யும்!

எதுவரை எம்மூச் சியங்கு கின்றதோ,
எதுவரை எம்முடல் இம்மண் தோயுமோ,
எதுவரை எம்மனம் நினைவலை எழுப்புமோ,
அதுவரை மொழி,இன ஆர்ப்படங் காது!

நறைபிழி தீந்தமிழ் நலங்கரு துகையிலே
சிறையின் கதவுகள் என்செயும் எஎம்மை

அடிமைத் தமிழரின் விடிவெண் ணுகையிலே
மிடிமைச் சிறைக்கத வென்செயும் எம்மை?
ஒண்புகழ்த் தமிழ்நிலம் உரிமை மீட்கையில்
திண்சிறைக் கம்பிகள் என்செயும் எம்மை?

விடியாத் தமிழ்நலம் வித்திடும் எமக்குப்
படியாத் துன்பம் படரினும் படர்க!
துடியா நிற்கும்என் நாவும் உயிரும்
வடியா உணர்வும் வன்மை எய்துக!

அடிமை மீட்கும் அரும்பணி செய்கையில்
குடிமை பெயர்ந்ததெம் உயிரெனில், கொண்டிடும்
உடலுக் கதுதான் உவகை;
அடலுக் கதுதான் அரும்பெறல் வாழ்வே!

- 1975
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/88&oldid=1446061" இலிருந்து மீள்விக்கப்பட்டது