பக்கம்:கனிச்சாறு 7.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


34

என் வாழ்வும் தமிழும் ஒன்றன்றோ?


உண்மைக் கென்றும் அழிவில்லை - என்
உயிர்மைக் கென்றும் இழிவில்லை!
திண்மைக் கென்றும் தளர்வில்லை - என்
தெளிவுக் கென்றும் அசைவில்லை! 1

நேர்மைக் கென்றும் தாழ்வில்லை - என்
நிகழ்வுக் கென்றும் வீழ்வில்லை!
கூர்மைக் கென்றும் மழுக்கில்லை - என்
கொள்கைக் கென்றும் இழுக்கில்லை! 2

அன்புக் கென்றும் காய்வில்லை - என்
ஆண்மைக் கென்றும் தேய்வில்லை!
இன்புக் கென்றும் குறைவில்லை - என்
எழுத்துக் கென்றும் மறைவில்லை! 3

அறிவுக் கென்றும் மருளில்லை - என்
ஆய்வுக் கென்றும் இருளில்லை!
செறிவுக் கென்றும் குழிவில்லை - என்
செம்மைக் கென்றும் சுழிவில்லை! 4

முயற்சிக் கென்றும் களைப்பில்லை - என்
முனைப்புக் கென்றும் இளைப்பில்லை!
பயிற்சிக் கென்றும் ஓய்வில்லை! - என்
பண்புக் கென்றும் சாய்வில்லை! 5

போக்குக் கென்றும் முடிவில்லை! - என்
புலனுக் கென்றும் நொடிவில்லை!
நோக்குக் கென்றும் ஒடிவில்லை! - என்
நுகர்ச்சிக் கென்றும் வடிவில்லை! 6

பேச்சுக் கென்றும் இடையில்லை - என்
பிடிப்புக் கென்றும் தடையில்லை!
மூச்சுக் கென்றும் முட்டில்லை - என்
மொய்ம்புக் கென்றும் தட்டில்லை! 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/93&oldid=1446077" இலிருந்து மீள்விக்கப்பட்டது