பக்கம்:கனிச்சாறு 7.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54  கனிச்சாறு - ஏழாம் தொகுதி


“மலையை இடித்தொரு சுவரை எழுப்பிட
மனமுந் துணிவதுவோ? - நெஞ்சாங்
குலையைப் பிழிந்தொரு குவளைக் குருதிக்குக்
கொள்கை வகுப்பதுவோ?
சிலையை அழித்தொரு செங்கல் வடித்திடச்
சிற்றுளி ஏந்துவதோ? - தாய்
முலையை யறுத்திட்டுக் குழந்தைவாய்ப் பாலுக்கிங்
கலைய முனைந்துவிட்டீர்!”

“நிலவைப் பழித்தொரு மின்மினிப் பூச்சிக்கு
நெட்டுயிர்த் தோடுவதோ? - தொங்கும்
பலவைத் தவிர்த்தேஓர் இலந்தைப் பழத்தினைப்
பார்த்துளம் ஏங்குவதோ? சாந்துக்
கலவைக் குழையினை மார்புறப் பூசாமல்
களிமண்ணை மோப்பதுவோ? - வரும்
உலவை மனம்நொந்து தென்றலைத் தவிர்த்திட
உள்ளந் துணிந்து விட்டீர்!”

என்றுரை கூறி இடித்தனர், பற்பலர்,
என்னுளந் தாழ்ந்திடுமோ? - ஒரு
குன்று பொடிந்து நொறுங்குதல் யாங்கேனும்
கூறிடக் கேட்டதுண்டோ?
நின்று படித்தயெம் பாடத்தைக் கேட்டவர்
நெட்டப் படுத்திடினும் - உயிர்
அன்று துணிந்(து) உடல், ஆகிய கொள்கையை
ஆற்றமறப் பேனோ?

சுமந்து சுமந்தென்றன் வல்லுடல் கூனியே
சுருண்டு படுத்திடினும் - தமிழ்
கமழ்ந்து மணக்குமென் நெஞ்சாங் குலையினைக்
கசக்கிப் பிழிந்திடினும்,
அமிழ்ந்து கிடக்குமென் இனத்தையும் நாட்டையும்
ஆருயிர்த் தமிழினையும் - வான்
நிமிர்ந்து நிறுத்திமுன் னேறிடச் செய்யாமல்
நீட்டிப் படுப்பேனோ?

-1983
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/99&oldid=1446091" இலிருந்து மீள்விக்கப்பட்டது