பக்கம்:கனிச்சாறு 8.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  97


நேருமே யன்றி நிகழ்த்திய தொண்டினில்
யாரும் ஏற்றமும் தாழ்வதும் யாக்கிலர்!
கதிருள் ளளவும் காற்றுள் ளளவும்
அதிரா நின்ற திரு.வி.க. - எனும்
மேதகு தலைவன் முனிவன் மிழற்றிய
தீதரு தொண்டின் திறங்குறை யாது!
காணுங் குறையெலாம் காண்பவர் குறையே!
காணும் நிறையெலாம் காட்சியின் நிறையே!
பெரியோன் தொண்டின் பெரும்பங்கு என்பதால்
உரியோ ரெல்லாம் தங்கருத் துரைத்தனர்!
மொழித்தொண் டேஎன அவரை மொழிந்தவர்
மொழிப்பற் றாலே அங்ஙன் மொழிந்தனர்!
பொதுத்தொண் டேஎன அவரைப் பேசியோர்
பொதுத்தொண் டார்வமோ டங்ஙன் பொழிந்தனர்!
இருவகை யோர்க்கும் ஏற்ற தொண்டராய்
அருமைத் தலைவராய் அவர்வாழ்ந் திருந்தார்!

ஏற்றவோர் கருத்தை இருபுடை தாங்கி
ஏற்றமும் இறக்கமும் கண்டிடும் இயல்பினால்
தக்க அறிஞரும் தகுபுல வோரும்
ஒக்க ஆய்ந்திரு கூறாய் உரைத்தனர்!
இருதிறத் தாரும் ஏற்க உரைத்ததை
ஒருதிறப் படுத்தி உரைப்பது கடினமே!
ஒருதிறம் போற்றின் ஒருதிறம் குன்றும்!
ஒருதிறம் கொள்ளின் ஒருதிறம் எஞ்சும்;
ஆய்பொருட் பெருமையால் ஆய்வு சிறந்தது!
மாய்பொரு ளென்னின் பெருமைமாய்ந் திருக்கும்!

தொட்டவர் கையும் மனமும் துலக்குறும்
மட்டறு சிறப்பின் மணவழ கோனை
எதனில் உயர்ந்தோன் எதிற்சிறந் தோன் - என
அதனதன் சீர்சொல்லி ஆய்வுரை கூறுதல்
எம்மோர்க் கரியதே! இருப்பினும் ஈண்டு
நம்முடை ஈரணி நாட்டிய திறத்தினை
கருத்து வலிவினை ஆய்ந்து கழறுதல்
பெருத்த மகிழ்ச்சியாம்! பிழையிலாச் செயலாம்!

தமிழ்த்தென்றல் மனத்தினராய்த்
தளராத பொதுத்தொண்டு செய்தார் அண்ணல்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/111&oldid=1448445" இலிருந்து மீள்விக்கப்பட்டது