பக்கம்:கனிச்சாறு 8.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


கண்ணனுக்குத் தாசனென்பான் ‘கவி’யெழுத
வல்லனென்பான்; கழுத்த றுப்பான்!
புண்ணுக்குச் சீழ்போலப் புழுவுக்கு
மலம்போலப் புதுமை யென்னும்
மண்ணுக்குச் செந்தமிழால் மாரடிப்பான்!
மாண்பிழப்பான்! மலத்தைத் தின்னும்
பெண்ணுக்குப் பிறக்கின்ற குட்டிகள்போல்
பாப்பலவாய்ப் பெற்றான் அங்கே!

ஆயிரம்பேர் நடுவினிலே பெண்விளக்கை
நிறுத்தியங்கே அவிழ்த்துப் போட்டு
வாயினிலே நீருற்றல் போல்மதுவை
வயிறார மண்டி விட்டுக்
காயாயும் பிஞ்சாயும் சொல்லுதிர்த்துக்
காட்டியவை கனிகள் என்றே
வாயுரமாய்ப் பேசுகின்ற வகையல்லால்
நல்லதமிழ் வழக்கங் குண்டா?

பளபளக்கும் திரைப்படத்துக் கூத்தியர்தம்
பண்பிழக்கும் பான்மை யெல்லாம்
வளவளக்கும் சொல்லாலே வழித்தெடுத்துப்
பாட்டென்னும் வடிவங் காட்டித்
தொளதொளக்கும் ஆடையினைச் சிறுகுழந்தை
போட்டதுபோல் துவளக் காட்டும்,
சளசளக்கும் ஓசையெல்லாம் பாட்டென்றால்
செந்தமிழும் சாதல் நன்றே!

ஆடையினை முற்றாக அவிழ்த்துப்போட்
டாடுவதே ஆடல் என்றால்,
ஓடையிலே நீர்போல ஒன்பதுகோ
டிப்பாடல் உரைக்க வல்லோம்!
கூடையிலே வாருகின்ற சரளைகள்போல்
கோடிப்பா குவித்தும் என்ன?
பாடையிலே போகின்ற பிணம்போலுன்
பாடலெல்லாம்! பயனென் காண்போம்!

பாவேந்தன் மொழியுணர்வுப் பாடலொன்றைக்
குழந்தைக்கும் படித்துக் காட்டில்
நாவேந்தும் செந்தமிழை! நல்லுணர்வை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/116&oldid=1448453" இலிருந்து மீள்விக்கப்பட்டது