பக்கம்:கனிச்சாறு 8.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  121

என்விளக்கம்! உணர்ந்தீரா? இருக்கும் உயிர் யாவும்
இயற்கைத்தாய் செய்தெடுத்து வீசிவிட்ட உயிராம்!
என்வியப்பு! பாவேந்தன் உயிரைமட்டும் நன்றாய்
எழில்சீர்த்தி அறம்செழுமை வீரத்தொடு புனைந்தாள்!

பாவேந்தன் சொல்லுகின்றான்; யாரிவன்போல் சொன்னார்!
பாருங்கள் மேன்மேலும் அவன்கையின் வண்ணம்!
நாவேந்திப் பிறர்சொன்னால் உணர்வேந்திச் சொல்வான்!
நல்லதமிழ் பிறர்சொன்னால் உயிர்த்தமிழைச் சொல்வான்!
காவேந்திக் கொண்டிருக்கும் பூவேந்தித் தேனைக்
களிமதர்ப்பக் குடித்திசைக்கும் தேனீப்போல் தமிழன்
ஈவேந்தித் தருகின்றான் செந்தமிழாய்! பாவாய்!
இயற்கையினை இவனைப்போல் படம்பிடித்த தெவரே?

‘கடல்நீரும் நீலவானும் கைகோக்கும்’ என்றே
கற்பனைக்கும் கற்பனையாய் யார்சொன்னார்! கேட்பீர்:

‘கடல்நீரும் நீல வானும்
கைகோக்கும்! அதற்கி தற்கும்
இடையிலே கிடக்கும் வெள்ளம்!
எழில்வீணை! அவ்வீ ணைமேல்
அடிக்கின்ற காற்றோ வீணை
நரம்பினை அசைத்தின் பத்தை
வடிக்கின்ற புலவன்! தம்பி

வன்கடல் பண்பாடல் கேள்!


உடலிலவன் நறுந்தென்றல் உணர்வுபெற்றுப் பேசும்
ஒருபாட்டைக் காட்டுகிறேன் கேளுங்கள் நன்றாய்!

“களிச்சிறு தும்பி பெற்ற
கண்ணாடிச் சிறகில் மின்னித்
துளிச்சிறு மலர்இ தழ்மேல்
கூத்தாடித் துளிதேன் சிந்தி
வெளிச்சிறு பிள்ளை யாடும்
பந்தோடு விளையா டிப்போய்க்
கிளிச்சிற காடை பற்றிக்

கிழிக்கின்றாய் தென்ற லே,நீ!”


அடல்மிகுந்த கடுங்காட்டை அவன்காட்டு கின்றான்!
ஆனைஒன்றே இளமரத்தை முறித்திடுமாம் - பாரீர்!

“ஆனைஒன் றிளம ரத்தை
முறித்திடும்; ஆந்தைக் கூட்டைப்

பூனைஒன் றணுகும்; அங்கே
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/135&oldid=1448480" இலிருந்து மீள்விக்கப்பட்டது