பக்கம்:கனிச்சாறு 8.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  135


கம்பன்முதல் கண்ணனுக்குத் தாசன்வரை எல்லாம்
‘கவி’யெழுதிப் பாட்டெழுதி உடல்வளர்த்த நாட்டில்
கொம்புயர்ந்த காளையென அரிமாவே என்ன
கொடுமுடியில் வீழ்ந்தஇடி முழக்கத்தைச் செய்து
நம்பிறழ்ந்த நிலையினையும் நம்மிழிவும் போக்க
நானென்றே எழுந்துவந்தான் பாவேந்தன் போல
சிம்புள்எது? வேங்கைஎது? அடடா,ஓ!சீ!சீ!
சீரழியும் உடலுக்குள் மானமன்றோ வீரம்!

6. தமிழ்

செந்தமிழ்மேல் பாவேந்தன் வைத்தபெரும் அன்பைச்
சிறுமைபெற வெறியென்னும் வெறிநாய்கள் மட்டும்
தந்தம்மொழி மேல்வைக்க விலையாஇந் நாட்டில்!
தாய்மொழிமேல் அன்புவைத்தே இனம்பேணல் தீதா?
இந்திமொழி மேலவர்கள் வெறியின்றித் தானோ
‘எல்லாரும் இந்திபடித் திடுக’என மொழிவார்!
சொந்தமொழிக் குயர்வின்றி இனந்தாழும் போது
சொத்தைமொழி பிறமொழியைப் போற்றுவதே தீது!

பாவேந்தன் தமிழ்க்காதல் இயற்கை; அதில் தாழ்ச்சி
பகருவதே தாய்மொழிமேல் பற்றற்ற செய்கை!
ஈவேந்தும் தாயன்பு கொழித்திடும்தாய் மொழியில்!
எந்தாய்மேல் பற்றுவைக்கும் உணர்வு,வெறி என்றால்
சாவேந்தும் அக்கொள்கை; சழக்கேந்தி வீழும்!
சரிநிகர்க்கும் தாய்மொழியும் பிறமொழியும் என்றே
நாவேந்திக் கூறிடினும் ஒப்பிவிடோம் யாங்கள்!.
நந்தமிழர் முன்னேற்றம் செந்தமிழ்முன் னேற்றம்!

நேற்றுவந்த இந்திமொழி தேசமொழி என்றால்,
நிலத்துமொழி யாவினுக்கும் தாயாகி நிற்கும்
ஊற்றுமொழி, உணர்வுமொழி, உண்மைமொழி, இந்த
உலகத்து மொழிகளுக்கும் மூத்தமொழி, மேலோர்
ஏற்றமொழி, இயற்கைமொழி, இனியமொழி, பண்டை
இலக்கியமும் இலக்கணமும் செறிந்தமொழி, இன்னும்
வேற்றுமொழி யாவையுமே கருவுயிர்க்காப் போதில்
விளைந்துபெரு மரமாகி நிற்குமொழி தமிழாம்!

செந்தமிழைத் தாய்மொழியென் றொருமுறையால் மட்டும்
சிறப்பதன்மேல் சாற்றவில்லை; தாய்ஊமை யானால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/149&oldid=1448535" இலிருந்து மீள்விக்கப்பட்டது