பக்கம்:கனிச்சாறு 8.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


சொந்தமென ஒன்றிருக்கும்; உயர்வென்றால் சரியோ?
சொல்லுகின்ற சிறப்பெல்லாம் உலகப்பே ரறிவோர்
தந்தசிறப் பன்றோ?நம் தாய்என்றால் மட்டும்ன்ளது
தகுதியிலாப் பெருமையெலாம் உரிமையென்றே ஆமோ?
முந்துசிறப் பெனில்உலகம் ஒப்புதல்வேண் டாமோ?
முத்தமிழின் முழுச்சிறப்பில் எந்தவற்றைச் சொல்வீர்?

பலரறியும் வாய்ப்பொன்றால் ஒருமொழியைப் பிறரும்
படித்தறிய வேண்டுமெனில் அறிவுக்குயர் வெங்கே?
பலரறியும் கீழ்மைக்கும் மேன்மேலும் மேலும்
பல்வகையால் அதிகார வாய்ப்பளிப்ப தென்றால்
சிலரறியும் சிறப்புக்கும் கீழ்மைவா ராதோ?
சிந்தனைக்கும் உயர்வுக்கும் மற்றென்தான் பெருமை?
பலரறிவ தென்றில்லை; உங்கள்கர வெல்லாம்
பைந்தமிழ்க்குச் சிறப்புவரக் கூடாதென் பதுவே!

செந்தமிழ்க்கு வாய்ப்பளித்திங் குலகறியச் செய்தால்,
செத்தமொழி வடமொழிக்கும் இந்திக்கும் என்று
சொந்தநலம் ஒன்றிருக்கக் காணார்கள் யாரும்!
சோற்றுநலம் பெரிதென்பார் இங்கிருப்ப தாலே
எந்தமிழைப் பிறரறிய வாய்ப்பின்றிச் செய்தார்!
எதனிலுமே உயர்வுக்கே வாய்ப்பளிக்கும் ஆள்வோர்
செந்தமிழ்க்கு வேண்டாதார் - ஆரியர்என் பதனால்
சிறுமைக்கே வாய்ப்பளித்துப் பெருமைதனை யழிப்பார்!

எப்பெருமை சாற்றிடினும் ஆரியர்க்குச் சிறுமை
இம்மிவரக் கூடாதென் பதுவடவர் கொள்கை!
எப்பொழுதும் வடவோரே தலைமைதாங் குவதால்
எப்பொழுதும் தமிழுக்கே வாய்ப்பளிப்ப தில்லை!
இப்பொருளை - இவ்வுணர்வை - எந்தமிழர் எக்கால்
ஏற்றறிந்து கொள்வாரோ அப்பொழுதே தமிழ்க்கும்
முப்படியும் வாய்ப்புவரும்; இனமும்முன் னேறும்!
முன்னிழந்த பெருமையெலாம் பின்னெழுந்து சேரும்!

ஈங்கிதைத்தான் பாவேந்தன் எடுத்துரைக்கக் கேட்டோம்!
ஏற்றமிகு பாக்களினால் மாற்றம்வரக் காணோம்!
ஆங்கதையே பெருமையெனக் கருதிவிட்ட ததனால்
அவன்கருத்தை விட்டுவிட்டே அவன்பெருமை ஆர்ப்போம்!
தூங்குகின்றோம்; தூங்குகின்றோம்; தூங்குகின்றோம் இன்னும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/150&oldid=1448536" இலிருந்து மீள்விக்கப்பட்டது