பக்கம்:கனிச்சாறு 8.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  143


வடித்த புலவனல்லன்! வற்றாத கொள்கைவெள்ளம்!
திக்கித் திணறித் தெருத்திண்ணை மேலமர்ந்து
எக்கியெக்கி மோனைக்கும் எதுகைக்கும் ஏங்கிநின்று,
பாதையிலே போகும் பாவையர்மேல் கண்மொய்த்தே
ஊத்தைச் சதையின் உருட்சியிலும் திரட்சியிலும்
முன்னழகைப் பாடி முத்தமிழைக் காசாக்கிப்
பின்னழகைப் பாடிப் பிழைப்பை நடத்துகின்ற
பேடிப் புலவனல்லன்! பீற்றைப் பா வலனல்லன்!
கோடிகொடுத்தாலும் கொள்கை நழுவாமல்
தமிழைத் தமிழினத்தைத் தமிழ்நாட்டை உய்விக்க
அமிழ்த மொழியால் அழகுதமிழ் பாடியவன்!

எந்தமிழைச் சேறாக்கி, இழிவுணர்வைச் சோறாக்கும்
மந்த மதியனல்லன்! மாணிக்கப் பாட்டரசன்!
காமத்தைச் சொல்லாக்கிக் கழிசடையைப் பாட்டாக்கி
ஆமாம்போட் டரசவையை ஆண்ட புலவனல்லன்!
புண்பட்டுப் போன பொய்யாத் தமிழ்க்கதையைப்
பண்பட்ட சொல்லால் பதப்படுத்திக் காட்டியவன்!

காலத்தால் வீழ்ந்துவிட்ட காய்த்த தமிழ்மரத்தை
ஞாலத்தில் தோள்கொடுத்துத் தாங்கிநிலை நாட்டியவன்!
நெருப்புப் பொறிபறக்கும் நெற்றுதமிழ்ச் சொல்லெடுத்து,
விருப்பத் தமிழ்ப்பாட்டாய் விளைவித்து, நம்மினத்தின்
மானத்தைக் காக்கவந்த மாவேந்தன்! மண்டுதமிழ்ப்
பானல் மொழிகாத்த பாவேந்தன்! பைந்தமிழை
நாள்தோறும் பாய்ச்சிவிட்ட நாவேந்தன்! நாட்டுணர்வை
மூள்வித்துக் காத்ததமிழ் மூவேந்தன்! மொய்ம்பனவன்!

விருத்தத்தில் கம்பன்! வெண்பாவில் புகழேந்தி!
கருத்தினிலே நக்கீரன்! காட்சியிலே கபிலன்!
பொருத்தமாய்ச் செஞ்சொல் புனைவதிலே பரணன்!சீர்
திருத்தத்தில் - புரட்சி செய்ததிலே - பாவேந்தன்!

இத்தகைய மெச்சுபுகழ் ஏற்றத்தில் என்றென்றும்
முத்தமிழும் உள்ளவரை முழுவுலகும் உள்ளவரை
புரட்சிப்பா வேந்தன் புகழும் நிலைத்திருக்கும்!
வரட்சி தமிழ்க்கில்லை; வாழும்அவன் பாடல்களால்!

பாரதிக்கு தாசனென்று பண்பால் தனையழைத்தான்!
பாரதியோர் பார்ப்பான்! எனவே பெயர்பெற்றான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/157&oldid=1448549" இலிருந்து மீள்விக்கப்பட்டது