பக்கம்:கனிச்சாறு 8.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


பெண்ணுரிமை:

“பெண்களால் முன்னேறக் கூடும் - நம்
பைந்தமிழ் நாடும்எந் நாடும்”

“ஆண்உயர் வென்பதும் பெண்உயர் வென்பதும்
நீணிலத் தெங்கணும் இல்லை!
வாணிகம் செய்யலாம் பெண்கள் - நல்
வானூர்தி ஓட்டலாம் பெண்கள்!”

“பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே”

“இவ்வுலகில் அமைதியினை நிலைநாட்ட வேண்டின்
இலேசுவழி ஒன்றுண்டு; பெண்களைஆ டவர்கள்
எவ்வகையும் தாழ்த்துவதை விட்டொழிக்க வேண்டும்;
தாய்மையினை இழித்துரைக்கும் நூலும் ஒரு நூலா?”

“அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்

அழகிய தமிழ்நாட்டின் கண்கள்!”


கல்வி நலம்:

தலைவாரிப் பூச்சூடி உன்னைப் - பாட
சாலைக்குப் போஎன்று சொன்னாள்உன் அன்னை!

சிலைபோல ஏனங்கு நின்றாய் - நீ
சிந்தாத கண்ணீரை ஏன்சிந்து கின்றாய்!
மலைவாழை யல்லவோ கல்வி - நீ
வாயார உண்ணுவாய் போ,என் புதல்வி!

படியாத பெண்ணாயிருந்தால் - கேலி
பண்ணுவார் என்னைஇவ் வூரார் தெரிந்தால்!
கடிகாரம் ஓடுமுன் ஓடு - என்
கண்ணல்ல அண்டைவீட்டுப்பெண்க ளோடு!

கடிதாயிருக்கும் இப்போது - கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியும்அப் போது!
கடல் சூழ்ந்த இத்தமிழ்நாடு - பெண்
கல்வி பெண்கல்விஎன் கின்ற தன்போடு!”

(வேறு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/170&oldid=1448576" இலிருந்து மீள்விக்கப்பட்டது