பக்கம்:கனிச்சாறு 8.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  165


ஈவேந்தும் தென்மொழியின் தொடக்கநிலைத் தொண்டரவர்!
இனியவுரைப் பொழிவில் வல்லார்!
இசைப்புலவர்; உரைப்புலவர்; இவண்வருவார்; பாவேந்தர்
இனியதமிழ் உள்ளம் காண்பார்!

2. இனவுணர்வு - அரிமாப் பாண்டியன்

பெரியார் கொள்கையின்
அரிமாப் பாண்டியன்
அரிய இனவுணர் வளிக்கும் பாவலர்!
ஆனைமுத் தீன்ற அணிமுத்தைச் சூடியவர்!
கோணைக் கொள்கையர் அல்லர்! என்றும்
குனியாக் கொள்கையர்! தனித்தமிழ் உணர்வினர்!
இனநல உணர்வை எடுத்திங் குரைத்திட!
அன்புடன் அவரை அழைப்போம்! அவரும்
தென்புடன் நறும்பா திகழ்ந்திடத் தருவார்!

3. நாட்டுணர்வு - தமிழியக்கன்

தனித்தமிழ்ப் பாவலர் தமிழியக்கனார்
இனித்த தமிழில் இலக்கியம் வடிப்பவர்!
தென்மொழி தமிழ்ச்சிட் டிதழ்களில் தெவிட்டா
நன்முறை அறிவியல் உயிரியல் பற்றிப்
பற்பல பாக்கள் பயன்மிக எழுதி
நற்புகழ் பெற்றவர்! நற்றமிழ் வளர்ப்பவர்!
அன்ன புலவர்தாம் அரும்பா வேந்தர்
நன்னரும் உணர்வில் நாட்டுணர் வூட்டிடும்
இன்னரும் பாக்களை எடுத்திங் கியம்புவார்!
இந்நாள் அவர்குரலுக் கேற்றம் பலவாம்!
இளைஞர்க் கவர்குரல் ஏற்ற நறுங்குரல்!
வினைவலர் பலரை விளைவித் திடும்வகை
அவர்குரல் அமைக! ஆர்வம் பொங்குக!
எவரும் மகிழ்ந்திட இவரையாம் அழைப்போம்!

4. இயற்கை - கலியபெருமாள்

கவின்தமிழ்ப் பாவலர் கலிய பெருமாள்!
செவியும் உள்ளமும் சிலிர்த்து மகிழ்ந்திட
பாவேந்தர் இயற்கையைப் பாடிய உணர்வினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/179&oldid=1448610" இலிருந்து மீள்விக்கப்பட்டது