பக்கம்:கனிச்சாறு 8.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


‘வெள்ளம்போல் தமிழர் கூட்டம்
வீரங்கொள் கூட்டம்! அன்னார்
உள்ளத்தால் ஒருவ ரேமற்
றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொ ணாதே’.
எனவையம் கலங்கக் கண்டு
துள்ளுநாள் எந்நாள்? உள்ளம்

சொக்குநாள் எந்த நாளோ?


இதைக்கண்டு கொண்டோமா நாம்? என்செய்தோம்? இங்கே
ஏற்றத்தாழ் வொழிந்ததுவா? சாதிகள்மாய்ந் தனவா?
கதைக்கின்றோம் பாடுகின்றோம்! பாவேந்தன் சொன்ன
கருத்துக்கு மதிப்பில்லை! விழாவெடுப்போம்! அதனால்
புதைக்கின்றோம் அவன்பெருமை! புகழ்ச்சிவெறுஞ்சொல்லா?
புரட்சிசொன்னான்! மருட்சியுற்றோம் இருட்காட்டில் வாழ்வோம்!

பழந்தமிழ்ப் புலவர்போல் அவனெழுத வில்லை;
பாவேந்தன் புதுமைக்குக் குரல்தந்து நின்றான்!
இழந்திட்ட புகழ்மீட்க எந்தமிழைப் பாடி
எழுத்தாலே புரட்சிக்குக் கனல்மூட்டி வந்தான்!
முழந்தேடிச் சொற்களையும் வரிகளையும் எழுதல்
முழுவதுமே புலமைக்குத் திறம்என்றெண் ணாமல்
குழந்தைக்கும் விளங்குகின்ற எளியசொல் லாலே
குமுகாயச் சீர்மைக்குப் பாடல்கள் யாத்தான்!

எழுச்சிக்குக் குரல்கொடுத்தான் தமிழர்எல் லாரும்
இனம்மீட்க எழுந்தொருங்கே வாருங்கள் என்றான்!
முழுச்சிதைவே உற்றிருக்கும் இனநலமுன் னேற்றம்.
முன்பிருந்த வரலாற்றைப் புதுக்குகின்ற நோக்கம்.
மழுச்சிதைவே இல்லாமல் உழவேண்டும் தமிழர்!
மறுமலர்ச்சி பெறவேண்டும் தமிழ்இனமும் நாடும்!
குழுச்சிதைவாய் இல்லாமல் கட்சிசிதை வின்றிக்
கூடிநின்றால் தமிழர்க்கு வெற்றியுண்டாம் என்றான்!

(வேறு)


‘தென்னாட்டின் நிலைநினைத்தால் வெடிக்கும் உள்ளம்!
செந்தமிழர் நிலைநினைத்தால் துடிக்கும் நெஞ்சம்!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/184&oldid=1448630" இலிருந்து மீள்விக்கப்பட்டது