பக்கம்:கனிச்சாறு 8.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  177


14. பாவேந்தர் பாராட்டரங்கம்

(முத்தமிழ் மன்றம், ஊரகம் (B.H.E.L) திருச்சி,
பாவேந்தர் நூற்றாண்டு விழா - 22-1-1991)

பேரன்பும் பெருமதிப்பும் கொண்ட பெரியோரே!
சீரன்பு கொண்டிலங்கும் செந்தமிழத் தாய்மாரே!
சாகாத் தமிழ்ப்பண்பு கொண்ட நறுஞ் சான்றோரே!
ஏகாத் தமிழ் வீரம் இலங்கும் இளைஞர்களே!
உங்கள் அனைவர்க்கும் உளங்கனிந்த நல்வணக்கம்!

திங்கள், பரிதி திகழ்கின்ற காலமட்டும்
எங்கள் குலவிளக்காய் இளையோர் தம் கைவிளக்காய்
மங்காத் தமிழ்வளர்த்து மாயா இனம் வளர்த்துப்
பொங்குகின்ற நல்லுணர்வைப் புதுக்கிய நம் பாவேந்தர்
நூற்றாண்டு விழாப்பொழுதில் நடக்கும் இந் நிகழ்ச்சியினைப்
போற்றி மகிழ்கின்றேன் பொழிகின்ற நல்லுரையைக்
கேட்டுப் பெருவீறு கிளர்க்கின்ற நோக்கத்தில்
வீட்டுப் பணிமறந்து வீற்றிருக்கும் உங்களுடை
நல்லுணர்வை - நல்வரவை - நன்றியுடன் வாழ்த்துகின்றேன்
வெல்லுணர்வை அவ்வுணர்வு விளங்கிடவும் வேண்டுகின்றேன்

இவ்விழாவில் உங்களுடன் என் கருத்தை வைப்பதற்கு
இவ்வூ ரகத்தில் இருக்கும் மிகு மின் நிலைய -
முத்தமிழ் மன்றத்தார் முழுவாய்ப்பைத் தந்துள்ளார்.
அத்தமிழ் மன்றிற்கும் அகங்கனிந்த நன்றி சொல்வேன்!
செத்தழியும் நம் மினத்துச் செய்தியினைப் பேசாமல்
ஒத்தூதி ஒத்தூதி உருக்குலைந்து போயிருக்கும் -
போலி அரசியலை - பொய்ம்மைப் பொருளியலைக்
காலித் தனத்தின் கயமை மிகு கலையியலைக்
கூறுவதால் என்னபயன்? கூத்தாட்டக் காரரெல்லாம்
ஏறுகின்ற ஆட்சி இயங்குகின்ற காலமிது!

இக் காலக் கட்டத்தில் இருக்கின்ற நல்லோர்கள் -
திக் காலுக் கோரிருவ ராய்த் தெரியும் நற்றமிழர் -
அங்கொன்றும் இங் கொன்றுமாய் அழிந்து மடியாமல்
தங்கும் இனவுணர்வு - தாழாத நாட்டுணர்வு -
நல்லதமிழ்ப் பற்றெல்லாம் - நசிந்துபோ காதிருக்கும்
வல்லதமிழ்ச் சான்றோரும் வாழ்ந்துவரு கின்றார்கள்
என்பதற்கோர் சான்றேஆம் இம் மன்ற விழா - என்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/191&oldid=1448651" இலிருந்து மீள்விக்கப்பட்டது