பக்கம்:கனிச்சாறு 8.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 179


ஆரியர்கள் தங்கட்கே ஆக்கந் தரும்வகையில்
வீரத்தமிழ் வரலாற்றை வெறும்வரலா நாக்கிவிட்டார்
இந்த நிலைதெரிந்தால் ஏமாறி இருக்கோம், நாம்!
சொந்த இனத்தைச் சோற்றுக்குக் காட்டிக்கொடோம்!
வீடணர்கள் இன்னும் வெற்றியுடன் வாழார்கள்!
பீடழித்த பிரகலா தன்களிங்குப் பிறவார்கள்!

என்னசெய்வ தினிநாம்? எண்ணிப்பார்த் திடல்வேண்டும்
சொன்னசொற் கள்கோடி! சொத்தைகளாய்ப் போயினவே!
எத்தனைச் சான்றோர்கள் இருந்தார்கள் நம்மிடையில்!
எத்தனையோ பெரும்புலவர் இருந்து மறைந்துவிட்டார்!
வள்ளுவர்போல் இன்னொருவர் வருவாரா இனி, இங்கே?
தெள்ளுதமிழ் இளங்கோபோல் சாத்தன்போல் திகழ்வாரா?
பெரியார்போல் இன்னொருவர் பிறந்தினிமேல் வருவாரா!
அரியார்கள் எல்லாரும் அன்றிருந்து மாய்ந்துவிட்டார்!

இனிமேலும் நமையுயர்த்த எவரொருவர் வந்திடுவார்?
முனியாமல் ஒன்றும் - முணுமுணுப்புக் கொள்ளாமல்
சிந்தித்துப் பாருங்கள்! என்னசெய்யப் போகின்றோம்?
முந்தித் தவமிருந்து முத்தமிழ்த்தாய் பெற்றெடுத்து
வந்துசென்றார் எத்தனைப்பேர் வரலாற்றைப் பாருங்கள்!
நொந்துநொந்து சாவதல்லால் நுடங்கிவிட்ட நம்மினத்தைத்
தூக்கி நிறுத்திட, யார் தோன்றிவிடப் போகின்றார்?
மூக்கில் விரல் நிறுத்தி முடிவாக எண்ணிடுங்கள்!

கடந்தகா லத்துக் கதையினையோர் கணநேரம் -
நடந்துவந்த வரலாற்றை - நடக்கின்ற நிகழ்ச்சிகளோ
டொருநிமையம் நன்றாக ஒப்பிட்டுப் பாருங்கள்!
தெருநாய்க்கும் உரிமையுண்டு! திரிகின்ற பறவைக்கெலாம்
வாழ்வுரிமை உண்டு! என்றும் வாழ்விலவை தாழ்ந்ததில்லை!
வீழ்ந்துவிட்ட தமிழரினம் விழிப்பதுதான் என்றைக்கோ?
ஆழமாய்ச் சிந்தியுங்கள்! அன்றிருந்த நிலைகளென்ன?
வாழாமல் நந்தமிழர் வாழ்ந்துவரும் நிலைகளென்ன?
சிந்தித்துச் சிந்தித்து, ஓர் சிறந்த முடிவெடுங்கள்!
வெந்து மடிந்து நாம் வீணாகக் கூடாது!
இவ்விடத்தில் முன்னர்நாம் இழந்த வரலாற்றைச்
செவ்வையாய் நொடிப்பொழுது சிந்தித்துப் பார்த்திடுவோம்!
நாவேந்தும் செந்தமிழின் நல்லினத்தார் இடையினிலே -
மூவேந்தர் காலத்தில் - முழுவதுமாய் அடிமையுற்றுச்
சாவேந்தி வாழ்ந்திருந்து ஆரியத்தால் தந்துவந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/193&oldid=1448655" இலிருந்து மீள்விக்கப்பட்டது