பக்கம்:கனிச்சாறு 8.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  181


“உரம்பெய்த செந்தமிழுக் கொன்றிங்கு
நேர்ந்ததென உரைக்கக் கேட்டால்,
நரம்பெல்லாம் இரும்பாகி, நனவெல்லாம்
உணர்வாகி, நண்ணி டாரோ”

- என்றவா றெந்தமிழர் என்புகளில் நரம்புகளில்
நின்றிருந்த நல்லுணர்வில் நெருப்புணர்வை மூட்டிவிட்டார்!
தூங்கிக் கிடக்கின்ற தமிழர் தொடைகளிலே
நீங்காமல் கயிறுதிரிக் கின்றநெடுங் கூட்டத்தின்
முன்னர் இளைஞர்களை முடுக்கிவிட்டே எழச்சொன்னார்!
பின்னர் வரும்வரிகள் பேரரிமாச் சீற்றமன்றோ?

“வையம் ஆண்ட வண்டமிழ் மரபே!
கையிருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும் உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!
நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திடு!
பொன் மொழிக்கு நீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை உயர்த்துக!
செந்தமிழ்ச் சொல்லால் செயலால்
தடம்பெருந் தோளால் தொடங்குக பணியை”!


- பாவேந்தர் பணிக்குப் பைந்தமிழே கைக்கருவி!
நாவூறும் செந்தமிழால் நற்றமிழர் வாழ்வுவரும்!
என்றே உணர்த்த, அவர் எழிற்றமிழை முன்வைத்தே
ஒன்றாயித் தமிழினமும் உறக்கத்தை விட்டெழவே,
பல்லா யிரக்கணக்கில் பாடல்களை முழக்கிநின்றார்!
எல்லாமும் எடுத்தியம்பல் இயலாது தோழர்களே!
திசைமாறிச் செல்லும் இளைஞர்களைத் திசைதிருப்பப்
பிசைந்தெடுத்த வீரத்தில் பைந்தமிழைத் தான்கலந்து
வீறு முழக்கிநின்றார் வெந்தணலைச் சொல்லாக்கி!
பீறி அடிக்கின்ற எரிக்குழம்பைப் பாருங்கள்:

“.... சிறுத்தையே! வெளியில் வா!
எலி என உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலி எனச் செயல்செயப் புறப்படு வெளியில்!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திற விழி!
இங்கு உன் நாட்டுக்கு இழிகழுதை ஆட்சியா?
கைவிரித்து வந்த கயவர் நம்மிடைப்
பொய் விரித்து நம் புலன்கள் மறைத்துத்

தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/195&oldid=1448661" இலிருந்து மீள்விக்கப்பட்டது