பக்கம்:கனிச்சாறு 8.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182  கனிச்சாறு - எட்டாம் தொகுதி

நமக்குள உரிமை தமக்கென்பார், எனில்
வழிவழி வந்த உன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற்று எழுக!"

“மனிதரில் நீயும்ஓர் மனிதன்; மண்ணன்று;
இமைதிற! எழுந்து நன்றாய் எண்ணுவாய்!
தோளை உயர்த்து!! சுடர்முகம் தூக்கு!
மீசையை முறுக்கி மேலே ஏற்று!
விழித்த விழியில் மேதினிக் கொளிசெய்!
நகைப்பை முழக்கு! நடத்து உலகத்தை!

இது உன் வீடு!” -


பாவேந்தர் பற்றவைத்த பைந்தமிழத் தணல்வரிகள்!
ஏவுகின்ற கட்டளைகள்! எரிபந்தக் கருத்துகள்!

குகைக்குள் ளே தூங்கிக் கொண்டிருக்கும் சிறுத்தைகளைப்
பகைக்கெதிராய் வந்துநிற்கப் பதைபதைத்தே எழுப்புகின்றார்!

சிறுத்தைப் புலிகளைச் சீண்டிஎழுப்பிவிட்ட
திறத்தைப் புரிந்துகொண்ட தினவுப் புலிகளெல்லாம்
இலங்கையிலே ஆர்த்தெழுந்தே ஏறுநடைபோடுவதைக்
கலங்கியே ஓடிவந்த காவல் படையிடத்தில்
கேட்டால் தெரிந்துவிடும்! கிறுக்குப் பிடித்திருக்கும்
வீட்டிலுள்ள பூனைகட்கு வீரம் விளங்கிடுமா?
வாழப்பா டிக்கும் வாயாடி நடிகைக்கும்
கூழுக்குக் கும்பிடிடும் கூனிநிற்கும் தலைவர்க்கும்
எங்கே விளங்கிவிடும்? எப்படித்தான் புரிந்துவிடும்?
சங்கே முழங்கென்று பாவேந்தர் சாற்றுகின்றார்;

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!"
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு”
என்றார்!

"சீர்த்தியால் அறத்தால் செழுமையால் வையப்

போர்த்திறத்தால் இயற்கை புனைந்த ஓர் உயிர்” அவர்!

“எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள்
தனையீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால்
தினையளவு நலமேனும் கிடைக்கும் என்றால்
செத்தொழியும் நாளெனக்குத் திருநாள்”
- என்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/196&oldid=1448663" இலிருந்து மீள்விக்கப்பட்டது