பக்கம்:கனிச்சாறு 8.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 17

‘செந்தமிழே! உயிரே நறுந்தேனே!
செயலினை மூச்சினை உனக்களித் தேனே!
நைந்தா யெனில் நைந்து போகுமென் வாழ்வு’

தமிழனைப் பார்த்துச் சாற்றிய மொழியிது.

‘தமிழனே! இதுகேளாய். உன்பால்
சாற்ற நினைத்தேன் பலநாளாய்!’
கமழும்உன் தமிழினை உயிரென ஓம்பு!
காணும் பிறமொழிக ளோவெறும் வேம்பு
நமையெலாம் வடமொழி தூக்கிடும் தாம்பு!
நம்முரி மைதனைக் கடித்ததப் பாம்பு! (தமிழனே)


வஞ்சகர் வந்தவர் தமிழால் செழித்தார்;
வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தார்;
நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தார்;
நாமுயர்ந்தோம் இந்நாள் அவரஞ்சி விழித்தார்! (தமிழனே)

தனித்தியங் கும்தன்மை தமிழினுக் குண்டு!
தமிழே ஞாலத்தின் தாய்மொழி பண்டு;
கனிச்சாறு போற்பல நூலெலாம் கண்டு
காத்ததும் அளித்ததும் தமிழ்செய்த தொண்டு! (தமிழனே)

பாவேந்தர் சாற்றிய ஆணை மொழியிவை;

தாயின்மேல் ஆணை தந்தைமேல் ஆணை
தமிழக மேல் ஆணை!

தூயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான்
தோழரே உரைக்கின்றேன்.

நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டும்

ஓயுதல் இன்றி அவர்நலம் எண்ணி
உழைத்திட நான் தவறேன்.

தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என்
தாய்தடுத் தாலும் விடேன்.

எமைநத்து வாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/31&oldid=1447635" இலிருந்து மீள்விக்கப்பட்டது